மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை எமிஸ் தளத்தில் விபரம் பதிவேற்றம்
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை எமிஸ் தளத்தில் விபரம் பதிவேற்றம்
UPDATED : நவ 06, 2023 12:00 AM
ADDED : நவ 06, 2023 04:47 PM
உடுமலை:
கல்வி உதவித்தொகை பெற தகுதியான பள்ளி மாணவ, மாணவியர் விபரங்கள் எமிஸ் தளத்தில், பதிவேற்றம் செய்யப்படுகிறது என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பள்ளி மாணவர்களுக்கு தேசிய வழிமுறைகள் மற்றும் தகுதி உதவித் தொகை திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.குறிப்பாக, எட்டாம் வகுப்பில் இடைநிற்றலை குறைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசு சார்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், 9 முதல் பிளஸ் 2 வரையான, மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.மாணவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும். அவ்வகையில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவ, மாணவியரின் விபரம், எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வங்கிக் கணக்குடன் கட்டாயம், ஆதார் இணைத்திருக்க வேண்டும். தகுதியான மாணவர்கள், இ-சேவை மையம் வாயிலாக, ஜாதி, வருமானச் சான்றிதழ் விண்ணப்பித்து பெறலாம். தேவையான சான்றிதழ்களை தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமையாசிரியர் ஆவணங்களை முழுமையாக பெற்று, தகுதியானவர் விபரங்களை தெளிவுபடுத்தி, வரும், 15ம் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
