UPDATED : ஜன 28, 2010 12:00 AM
ADDED : ஜன 28, 2010 05:57 PM
மதுரை: ‘நவீன மரபியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்தலாம்” என உயிர் தொழில்நுட்ப ஆலோசகர் சின்கா பேசினார்.
மதுரை காமராஜ் பல்கலை உயிர்தொழில்நுட்ப துறை சார்பில், ‘ஜீன் சைலன்சிங்’ என்னும் நவீன மரபியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாம் துவங்கியது. துறைத் தலைவர் குணசேகரன் வரவேற்றார். பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஞானம் உட்பட பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமை துவக்கி வைத்த மத்திய அரசின் உயிர்தொழில்நுட்ப ஆலோசகர் சின்கா பேசியதாவது:
‘ஜீன் சைலன்சிங்’ என்பது நவீன மரபணு தொழில் நுட்பமாகும். இதை பயன்படுத்தி கல்லீரல், இரைப்பை புற்றுநோயை குணப்படுத்த முடியும். விவசாயத் துறையில் புதிய புரட்சியை செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தை பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு நிதிஒதுக்கி உதவி செய்கிறது. மதுரை காமராஜ் பல்கலைக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்த யு.ஜி.சி., இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். இணைபேராசிரியர் குமரேசன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கு 15 நாட்கள் நடக்க உள்ளது. இதில் இளம் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
