மாணவியர் கழிப்பறை: தேசியளவில் மாதிரி கொள்கை வகுக்க உத்தரவு
மாணவியர் கழிப்பறை: தேசியளவில் மாதிரி கொள்கை வகுக்க உத்தரவு
UPDATED : நவ 07, 2023 12:00 AM
ADDED : நவ 07, 2023 10:41 AM
காங்கிரஸ் நிர்வாகியும், சமூக சேவகியுமான ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போதிய வசதிகள் இல்லாத பதின்பருவ மாணவியர் மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.விசாரணை
இதனால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க பள்ளிகளில் மாணவியருக்கென போதுமான கழிப்பறைகள் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, தெரிவித்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, பள்ளி மாணவியருக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கான வரைவு தேசிய கொள்கை உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மாதவிடாய் சுகாதார மேலாண்மை உத்திகள் மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் நிதிகளின் உதவியுடன் அல்லது தங்கள் சொந்த நிதி வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நான்கு வாரங்களுக்குள் தேசிய சுகாதார இயக்கத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.மாதிரி திட்டம்
அதேபோல், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உறைவிட வசதியுடன் கூடிய பள்ளிகளில் மாணவியருக்கு தேவைப்படும் கழிப்பறைகளின் சரியான விகிதத்தையும் தெரிவிக்க வேண்டும்.பள்ளிகளில் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றை உரிய முறையில் அகற்றுவது குறித்தும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.இதையடுத்து, நாடு முழுதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் உறைவிட வசதியுடன் கூடிய பள்ளிகளிலும் மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் கட்டுவதற்கான தேசிய அளவிலான மாதிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு வகுக்க, வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
