கொரிய தமிழ்ச் சங்க கலை, இலக்கியச் சந்திப்பு, விருதுகள்
கொரிய தமிழ்ச் சங்க கலை, இலக்கியச் சந்திப்பு, விருதுகள்
UPDATED : நவ 07, 2023 12:00 AM
ADDED : நவ 07, 2023 04:48 PM
கொரியா:
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கொரியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள். பெண்கள் குத்துவிளக்கு ஏற்றியும், சங்கத்தின் கலைக்குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியும் நிகழ்ச்சியை இனிதே தொடங்கி வைத்தனர்.இந்தியத் தூதரக அலுவலர் நரேந்தர் சர்மா கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரா பாலச்சந்திரன் தமிழே தமிழே என்ற பாடலுக்கு தமிழரின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை, வரவேற்பு நடனமாக நிகழ்த்தினார். கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் (செயல்பாடுகள்) முனைவர் சரவணன் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். சங்க அறிமுகத்துடன், சங்கம் செய்து வரும் செயல்பாடுகளை தலைவர் முனைவர். அரவிந்த ராஜா செல்வராஜா தொகுத்தார்.இந்தியத் தூதரக அலுவலர் நரேந்திர சர்மா, இந்தியாவில் இருந்து சிறப்பு அழைக்கப்பட்டிருந்த கோ.பாலச்சந்திரன் சங்கத்தின் அறிவுரைக்குழு உறுப்பினர் ஆ. அந்தோணிசாமி, சொங்சு நகர காவல் துறையால் சிறந்த குடிமகன் விருதைப் பெற்ற சு. பிரபாகரன் மற்றும் பேராசிரியர் ம. பாலச்சந்திரன் ஆகியோருக்கு சங்க தலைவர் முனைவர் செ. அரவிந்த ராஜா, துணைத் தலைவர் விஜயலட்சுமி செயலாளர்கள் பீ. சகாய டர்சியூஸ், கோ. சரவணன் மதிப்பளித்தனர்.சங்கத்தின் கலைக் குழுவினரான விபின், பத்மப்பிரியா, ரங்காநாயகி, இராமச்சந்திரன்-இராதிகா இணையர், மைக்கேல்-இணையர், ஜெயஸ்ரீ, மற்றும் பிரியா பெரியசாமி பாடல், நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.சிறப்பு விருந்தினர் கோ. பாலச்சந்திரன் பொன்னியின் செல்வன் சோழ தேசம் நோக்கி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிறப்புரையின் முடிவில் கோ. பாலச்சந்திரனுக்கு கொரிய தமிழ்ச் சங்கத்தின் இவ்வருடத்திய உயரிய விருதான உலகின் தமிழன் என்ற விருதை சங்கத்தின் ஆளுமைக்குழுவினர் வழங்கினர். ஊடகவியலாளர் ச. கோபிநாத்துக்கு தமிழ் ஊடகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. அவரின்சார்பாகவிருதினைசங்கத்தின் மூத்த உறுப்பினர் முனைவர் காளிமுத்துபாண்டி பெற்றுக் கொண்டார்.மேலும் இம்முறை கொரியாவில் பணியாற்றும்/ வாழ்ந்து வரும் தமிழ்மக்கள், மூன்று முக்கியத் துறையில் விருது வென்றனர். முறையே முனைவர். யுவராஜ்ஆல்தொரை, முனைவர். குருசாமிராமன், முனைவர். சோனைமுத்து மோகன்தாஸ், முனைவர். சிவசங்கரன் அய்யாறு, மற்றும்முனைவர். க. பத்ரிநாராயணன் ஆகியோர் சிறந்த அறிவியல் பங்களிப்பிற்க்கான விருதினை வென்றார்கள்.விருது பெற்ற அனைவருக்கும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. சிறந்த தொழில் முனைவோர் சாதனைகளுக்காக முனைவர். ஜெகதீஸ் குமார் அழகரசனுக்கு சிறந்த தொழில் தொடங்குநர் விருது வழங்கப்பட்டது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் கொரியாவில் நடைபெற்ற பலமட்டைப்பந்து போட்டிகளில் வாகை சூடியமைக்காகவும் உடல்நலன்சார் விளையாட்டுகளில் சிறப்பாக செயற்பட்டமைக்காக சிறந்த விளையாட்டு அணிக்கான விருதை குன்சான் குழந்தைகள் அணி வென்றது.இந்தியாவில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மேலும் சில விருதுகள் வழங்கப்பட்டன. அதில் முனைவர் ஆ. முகமது முகைதீன் மற்றும் திருமதி. பொங்கல்புனிதா ஆகியோருக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது, தமிழரின் பாரம்பரியக் கலைகளை மேம்படுத்தும் முயற்சிக்காகவும் மற்றும் சமூக பணியாற்றியதற்காகவும் திருமதி. மதிவதனி பத்மநாதன், தி. ராமதாஸ், மோகன்பிரகதாசு கித்தா ஆகியோருக்கு சமூகசேவகர்விருது, இளம் வயதில் தமிழரின் பாரம்பரியக் கலைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று ப ல சாதனைகளை படைத்த ஜெ. அதீஸ்ராம்க்கு இளம்கலை மற்றும் பண்பாடுவிருது, இந்தியா-கொரியா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும், வலுப்படுத்துவதிலும் சிறந்த பங்காற்றியதற்காக பி. ஜெ. ஜனனிக்கு இந்திய-கொரியநட்புறவு விருது, தமிழ் மொழிக்கான அர்ப்பணிப்பு மற்றும் அதன் மேம்பாட்டிற்காக உழைத்ததற்க்காக ப. அர. ஜெயராஜன், முனைவர். மு. ரா. ஸ்ரீரோகிணி ஆகியோருக்கு தமிழ்ச்சுடர்விருது, என பல்வகை விருது வழங்கப்பட்டது. குறிப்பாக தமிழர் நலன் சார்ந்த பங்களிப்பிற்காகவும், தமிழ்கலை மற்றும் பண்பாடு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதற்காகவும் தமிழ்ச்சங்கம் நாசிக் (மகாராஷ்டிரா) அமைப்பிற்கு சிறந்த பொதுநலஅமைப்புவிருது வழங்கப்பட்டது.நிகழ்வில் கொரிய-தமிழ் மொழி மற்றும் நடவியல் ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஆராய்ச்சிக்கென கொரியா-தமிழ் மற்றும் உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம் என்கிற அங்கம் தொடங்கப்பட்டது. மேலும், சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் முனைவர் இரா. இராஜ்மோகன் எழுதிய சிந்தனை சிதறல்கள் என்கிற கவிதைத்தொகுப்பு, மதுமதி வீரபாண்டியன் எழுதிய சிறுகதை (தாய் மற்றும் ஊர்க்கிணறு) மற்றும் கவிதைத் தொகுப்பு (பொங்கும் காதல்) ஆகியவற்றை சிறப்பு விருந்தினர் கோ. பாலச்சந்திரன் வெளியிட நூலாசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.ஆனந்த், முனைவர். இராமன் மற்றும் பிரியந்த் ஆகியோர் அடங்கிய புகைப்பட குழு நிகழ்ச்சியின் ஒவ்வொரு அசைவினையும் அழகாக படமாக்கியது. முன்னதாக நிகழ்ச்சியை பிரியா ஆனந்த் மற்றும் ஜெயஶ்ரீ உற்சாகத்துடன் தொகுத்து வழங்கினர். நிறைவாக, சங்கத்தின் இணைப்பொருளாளர் முனைவர் ஜெரோம் நன்றியுரை வாசித்தார்.
