ஆசிரியர் நியமனத்தில் வயது வரம்பை உயர்த்த முதல்வரிடம் 17 அமைப்புகள் மனு
ஆசிரியர் நியமனத்தில் வயது வரம்பை உயர்த்த முதல்வரிடம் 17 அமைப்புகள் மனு
UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 09:48 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆசிரியர் நியமனத்தில் விதவை மற்றும் விவாகரத்தான பெண்களுக்கு, வயது வரம்பை உயர்த்த முதல்வர் ரங்கசாமியிடம், 17 அமைப்பபினர் மனு அளித்தனர்.புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி,அமைச்சர் லட்சுமிநாராயணனை, அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த சேஷாசலம், சிந்தனையாளர்கள் பேரவைத் தலைவர் செல்வம், உள்ளிட்ட, 17 அமைப்பினர், நேற்று சந்தித்து பேசினர். தொடர்ந்து புதுச்சேரியில் ஆசிரியர் நியமனத்தில் விதவை மற்றும் விவாகரத்தான பெண்களுக்கு, வயது வரம்பை உயர்த்த வேண்டும் என மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலத்தில் கடந்த, 8 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் நேரடி பணி நியமனங்களும் நடைபெறவில்லை. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை மூலம் தொடக்க பள்ளி ஆசிரியர் நேரடி நியமனம் நடைபெறாத காரணத்தால் தகுதி வாய்ந்த பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர் நேரடி நியமனத்தில் வயது வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய இனத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், விதவை மற்றும் விவாகரத்து ஆனவர்களுக்கும், வயது வரம்பை குறைந்த பட்சம், 40 ஆண்டுகள் வரை உயர்த்தி வழங்கினால் தான் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக, உறுதி அளித்துள்ளார்.
