UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 09:53 AM
திருவாலங்காடு:
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஜே.எஸ்.ராமாபுரம் கிராமம். இங்கு ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகத்தில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வந்தது. இந்த பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.இந்நிலையில் கடந்தாண்டு பள்ளி கட்டடம் சேதமடைந்ததை அடுத்து, 2022 - 2023ம் ஆண்டு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து, இரண்டு வகுப்பறை அமைக்க, 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பழைய பள்ளி கட்டடம் அகற்றப்பட்டது.தற்போது மாணவர்கள் அதே பகுதியில் வாடகை கட்டடத்தில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். வகுப்பறை கட்டடம் அகற்றப்பட்டபோது மாணவர்கள் அமர்ந்து பயில போடப்பட்டிருந்த டெஸ்க், டேபிள் உள்ளிட்டவை வகுப்பறையில் இருந்து அகற்றப்பட்ட நிலையில் அவை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படாமல், பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் போடப்பட்டது. இதனால் அவை கடந்த ஏழு மாதங்களாக மழை, வெயிலில் நனைந்தும், காய்ந்தும் துரும்பு பிடித்து பாழ் அடைந்து வருகிறது.
