அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம்: கேரளாவை பின்பற்றுமா தமிழகம்
அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம்: கேரளாவை பின்பற்றுமா தமிழகம்
UPDATED : நவ 11, 2023 12:00 AM
ADDED : நவ 11, 2023 04:38 PM
தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்திய போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு சிலபஸ் உருவாக்கி, புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதை கையாள, பி.எட்., முடித்த பட்டதாரிகளை நியமிக்க, முடிவு செய்யப்பட்டது. இதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த பட்டதாரிகள், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.ஆனால், புத்தகங்களை பள்ளிகளுக்கு விநியோகிக்காமல், கிடப்பில் வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், பலமுறை பட்டதாரிகள் வலியுறுத்தியும், நடுநிலை, உயர்நிலை வகுப்புகளுக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்டுவரப்படவில்லை.கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கையாளப்படுகிறது. தொழில்நுட்ப அறிவை மாணவர்கள் பெற வேண்டுமென, தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலும், ஆரம்ப வகுப்பில் இருந்தே, கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு எடுக்கப்படுகிறது. இதேபோல் அரசுப்பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, இப்பாடத்தை கட்டாயமாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு, ஹைடெக் ஆய்வகம் உள்ளது. இதை மாணவர்களுக்கு சொல்லி தர, பிரத்யேக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.எமிஸ் இணையதள பணிகள் மேற்கொள்ள, 9 ஆயிரம் கணினி பட்டதாரிகள், தொகுப்பூதியத்தில் பணியில் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களை, ஆறு முதல் பத்தாம் வகுப்புக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு எடுக்க அனுமதித்து, சிலபஸ் வெளியிட்டால், மாணவர்கள் பயனடைவர், என்றார்.
