முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் தேவையெனில் மறு விசாரணை
முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் தேவையெனில் மறு விசாரணை
UPDATED : நவ 12, 2023 12:00 AM
ADDED : நவ 12, 2023 12:14 PM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் தேவையெனில் கீழமை நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ.,காலனி ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜ் பல்கலையில் தமிழ்த்துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பல்கலை பாதுகாப்புக்குழுவை துவக்கினேன். பல்கலையில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக போராடினேன்.2014 மே 16ல் வீட்டிற்கு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டேன். சிலர், துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனுக்கு எதிராக பேட்டி கொடுக்கிறாயா, உன்னை கொல்லாமல் விடமாட்டோம், எனக்கூறி தாக்குதல் நடத்தினர். அப்போதைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், முன்னாள் பதிவாளர் (பொறுப்பு) முத்துமாணிக்கம், இளைஞர் நலத்துறை பிரிவு முன்னாள் தலைவர் செல்லத்துரை, பி.ஆர்.ஓ., (பொறுப்பு) அறிவழகன், ஓய்வு பெற்ற ஊழியர் செல்வராஜ் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.தாக்குதலில் ஈடுபட்டோரின் உறவினர்களுக்கு பல்கலையில் பணி நியமனம் வழங்கப்பட்டது. போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.கல்யாணி மதிவாணன், முத்துமாணிக்கம், செல்லத்துரை, அறிவழகன், செல்வராஜ், எங்கள் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசார் பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், என மனு செய்தனர்.நீதிபதி பி.புகழேந்தி:
போலீசார் மதுரை (ஜெ.எம்.,6) நீதிமன்றத்தில் சிலர் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் கல்யாணி மதிவாணன் உள்ளிட்ட 5 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால் வழக்கை ரத்து செய்யக்கோரும் அவர்களின் மனு மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. அம்மனு காலாவதியாகிவிட்டது.ஸ்ரீனிவாசனுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மதுரை (ஜெ.எம்.,6) நீதிமன்றத்தை நாடலாம். அந்நீதிமன்றம் விசாரணையை 8 மாதங்களில் முடிக்க வேண்டும். தேவையெனில் மறு விசாரணைக்கு உத்தரவிடலாம்.இவ்வாறு உத்தரவிட்டார்.
