UPDATED : நவ 14, 2023 12:00 AM
ADDED : நவ 14, 2023 06:47 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, கல்வியை கற்பதோடு மாணவர்கள் இருவர், பாரம்பரிய கலையான நாதஸ்வரம் இசையை, தந்தையுடன் இணைந்து வாசித்து அசத்தி வருகின்றனர். போட்டிகளிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் நாதஸ்வர கலைஞரான மணிவண்ணனின் மகன் சியாம்-15, (10ம் வகுப்பு); மகள் சுபஸ்ரீ - 12 (ஏழாம் வகுப்பு) ஆகியோர் புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.இவர்கள் படிப்போடு, தங்களது தந்தையுடன் சேர்ந்து கோவில் கும்பாபிேஷக விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்து அசத்துகின்றனர். மேலும், பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலை உற்சவ மாவட்ட அளவிலான காற்று கருவி இசை போட்டியில் சியாம், முதலிடம் பெற்றார்.இதுகுறித்து சியாமின் தந்தை கூறியதாவது:
பாரம்பரியம் மிக்க இசை குடும்பத்தில், ஐந்தாம் தலைமுறையாக இந்த கலைப்பணியை செய்து வருகிறோம். சியாம் கடந்த, 2019ம் ஆண்டு முதல் நாதஸ்வர பயிற்சி பெறுகிறார். இசை ஆசிரியர் பொள்ளாச்சியை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் கிருஷ்ணசாமியிடம் கற்று வருகிறார். அதே போன்று, இவரது தங்கை சுபஸ்ரீயும், நாதஸ்வரம் வாசித்து வருகிறார்.இவர்களுக்கு பக்கபலமாக தவில் கலைஞரான அவரது தாத்தா மாரிமுத்து, சித்தப்பா விஜயகுமார் ஆகியோர் ஊக்கம் கொடுக்கின்றனர். கடந்த, 2022ம் ஆண்டு மாவட்ட அளவிலான போட்டியில் பரிசு பெற்றார். தற்போது, மாவட்ட அளவிலான போட்டியில் வென்று, சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு சியாம் தகுதி பெற்றார்.எனது, மகன், மகள் இருவரும் கல்வியுடன், எங்களது பாரம்பரிய கலையை கற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
