இலக்கியங்களால் என்ன பயன்? விளக்கம் அளித்த கவர்னர் ரவி
இலக்கியங்களால் என்ன பயன்? விளக்கம் அளித்த கவர்னர் ரவி
UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 10:19 AM
சென்னை:
சென்னை, தமிழக கவர்னர் ரவி தலைமையில், இளம் சாதனையாளர்களுடன் எண்ணித் துணிக எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.இதில், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ - மாணவியரை பாராட்டிய கவர்னர், அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:
குழந்தைகள் தினத்தன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இயற்பியல், இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால், இலக்கியங்களால் என்ன பயன் என்று ஆரம்பத்தில் நான் நினைத்தது உண்டு.பின்னர், அதில் என்ன தான் உள்ளது என்று தேடித் தேடி படிக்கத் துவங்கினேன். குறிப்பாக, நோபல் பரிசு பெற்ற புத்தகங்களையும், விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களையும் படிக்கத் துவங்கினேன். இலக்கியம் நம்மை சிறந்த மனிதராக மாற்றும்.இன்றைய சூழலில், இளம் தலைமுறையினர், வாழ்க்கையில் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கவனத்தை சிதற விடாமல் உழைப்பை செலுத்தினால் வெற்றி நிச்சயம். முக்கியமாக, கவனச் சிதறலுக்கு வழிவகுக்கும் மொபைல் போனை இளைஞர்கள் அளவோடு பயன்படுத்த வேண்டும். அதற்கு அடிமையாகக் கூடாது. இந்தியாவின் வருங்காலம் இளைய தலைமுறையினரிடம் உள்ளது என்பதை நான் நம்பும் காரணத்தாலே, இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
