தமிழ் பள்ளிகள் பிரச்னையை தீர்க்க தயார்: பசவராஜ் ஹொரட்டி
தமிழ் பள்ளிகள் பிரச்னையை தீர்க்க தயார்: பசவராஜ் ஹொரட்டி
UPDATED : நவ 16, 2023 12:00 AM
ADDED : நவ 16, 2023 09:46 AM
பெங்களூரு:
தமிழ் பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள் பிரச்னையை தீர்த்து வைப்பதற்கு, நானும், அரசும் தயாராக இருக்கிறோம், எனகர்நாடக சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.கர்நாடகா தமிழ் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கர்நாடகா உதய தின விழா, புத்தக வெளியீட்டு விழா, குழந்தைகள் தின விழா ஆகிய முப்பெரும் விழா, பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. சங்க தலைவர் தனஞ்செயன் தலைமை வகித்தார்.விழாவை துவக்கி வைத்து, சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பேசியதாவது:
கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும், கன்னடர்களுடன் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். பெங்களூரில் 20 சதவீதம் தமிழர்களும், 23 சதவீதம் கன்னடர்களும் வாழ்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.எனவே கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களும் கன்னடர்கள் தான். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. தமிழ் பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள் பிரச்னையை தீர்த்து வைப்பதற்கு, நானும், அரசும் தயாராக இருக்கிறோம். தமிழர்கள் உட்பட அனைவரும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
