UPDATED : நவ 17, 2023 12:00 AM
ADDED : நவ 17, 2023 10:06 AM
ஆத்துார்:
சீவல்சரகு கூட்டுறவு கலைக்கல்லுாரி மாணவர்களின் கல்வி, பருவத்தேர்வு கட்டணங்களை அமைச்சர் ஐ.பெரியசாமி சொந்த செலவில் செலுத்தினார்.ஆத்துார் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகில் கூட்டுறவுத் துறை சார்பில் கலை அறிவியல் கல்லுாரி 2022ல் துவங்கப்பட்டது. இக்கல்லுாரிக்கு ரூ. 98 கோடியில் நவீன வசதியுடன் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. முதலாண்டில் 253, 2ம் ஆண்டில் 296 பேரும் படிக்கின்றனர்.முதலாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை கட்டணத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி சொந்த செலவில் செலுத்திய நிலையில், தற்போது முதலாண்டு, 2ம் ஆண்டு மாணவர்களின் பருவத்தேர்வு கட்டணங்களையும் செலுத்தி உள்ளார்.அவர் கூறியதாவது:
1989 முதல் இத்தொகுதியில் மக்களில் ஒருவராக இணைந்து உள்ளேன். கிராம மாணவர்களின் சிரமத்தை தவிர்க்க கூட்டுறவு துறை சார்பில் ஆத்துார் ஒன்றியம் சீவல்சரகிலும், உயர் கல்வித்துறை சார்பில் ரெட்டியார்சத்திரத்திலும் கலை கல்லுாரி ஏற்படுத்தப்பட்டு உள்ளன.கூட்டுறவு கல்லுாரியில் முதலாண்டை விட இந்தாண்டு 50க்கும் கூடுதலான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தொகுதியில் குறைந்த பட்சம் வீட்டிற்கு ஒரு பட்டதாரி உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
