எஸ்.ஐ., பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? பட்டதாரிகள் காத்திருப்பு
எஸ்.ஐ., பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? பட்டதாரிகள் காத்திருப்பு
UPDATED : நவ 17, 2023 12:00 AM
ADDED : நவ 17, 2023 04:56 PM
புதுச்சேரி:
சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெற்று ஓராண்டுகடந்துள்ள நிலையில், இளைஞர்கள் கலக்கமடைந்துள்ளனர். வயது கடந்து கொண்டிருப்பதால், தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 60 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு முடிவு செய்து கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டது. 10.11.2022 முதல், 09.12.2022 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர்.சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் பொது-25, இ.டபுள்யூ.எஸ்.,-6, ஓ.பி.சி.,-19, எஸ்.சி.,-9, எஸ்.டி.,-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்; அதில் மகளிருக்கு 33 சதவீதமாக 19 சீட்டுகள் உள் ஒதுக்கீடு தரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பில் எம்.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.அரசின் முடிவுக்கு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின், சப் இன்ஸ்பெக்டர் பணியிடம் உள்ளிட்ட அரசிதழ் அல்லாத குரூப் பி பணிடங்களுக்கு மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, எம்.பி.சி., பிரிவில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.மேலும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இரண்டாண்டு வயது தளர்வும் அளிக்கப்பட்டது. இருந்தபோதும், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இதுவரை தேர்வு நடத்தப்படவில்லை.ஆன்லைனில் விண்ணப்பம் பெற்று ஓராண்டு நிறைவடைய உள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்தாமல் உள்ளதால், தேர்வுக்கு தயாராகி வருகின்ற இளைஞர்கள் கலக்கமடைந்துள்ளனர். தங்களுடைய வயது வரம்பு கடந்து விடுமோ, தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என, அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், லோக்சபா தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் அறிவிப்பு வெளியாகி, மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டால், அதன் பிறகு, சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட எந்த அரசு பணியிடங்களுக்கும் நியமனம் செய்ய முடியாது. பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.இதனால், சட்டம் ஒழுங்கு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு நியமனம் நடந்தது. கடந்த 12 ஆண்டுகளாக புதிய நியமனம் எதுவும் கிடையாது. போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் உள்ள பட்டதாரி இளைஞர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.எனவே, லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன், எம்.பி.சி., இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான மறு அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மீண்டும் விண்ணப்பங்களை பெற்று, சப் இன்ஸ்பெக்டர் தேர்வை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
