3 ஆண்டுகளில் ககன்யான் நிறைவு மயில்சாமி அண்ணாதுரை தகவல்
3 ஆண்டுகளில் ககன்யான் நிறைவு மயில்சாமி அண்ணாதுரை தகவல்
UPDATED : நவ 20, 2023 12:00 AM
ADDED : நவ 20, 2023 10:40 AM
நாமக்கல்:
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும், ககன்யான் திட்டம் மூன்றாண்டிற்குள் நிறைவடையும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.நாமக்கல்லில் அவர் கூறியதாவது:
நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்தபோது, அமெரிக்காவில் இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தற்போது, நிலவின் தென் துருவத்தில், இந்தியா சார்பில், சந்திரயான்-3 முதலில் இறங்கியது. அதனால், இந்தியாவிலும் இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சியடையும். புவி வெப்பமயமாதல், நீர், காற்று மாசுபடுதல், விவசாய மேம்பாடு, நீர் மேலாண்மை போன்றவற்றுக்கு அறிவியல் தொழில் நுட்பம் வாயிலாக தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வம், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா நாடுகளின் முயற்சிகள் விரைவில் நிறைவேறும். இந்தியாவை பொறுத்தவரை, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும், ககன்யான் திட்டம் மூன்றாண்டிற்குள் நிறைவடையும். அதற்கான முதற்கட்ட பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.குலசேகரபட்டினத்தில், சிறிய கலங்களுக்கான ஏவுதளம் விரைவில் அமையும். புதிதாக ஏவுதளம் அமைக்கும் போது, அப்பகுதியை சுற்றி சிறிய செயற்கைக்கோள் தயார் செய்யும் மையங்கள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளுடன், செயற்கைக்கோள் மையம் அமைக்கப்பட்டால், வாரம் ஒரு செயற்கைக்கோளை அனுப்ப முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
