மாநில அளவில் ஒரே கேள்வித்தாள் தேவையில்லை: ஆசிரியர் சங்கம்
மாநில அளவில் ஒரே கேள்வித்தாள் தேவையில்லை: ஆசிரியர் சங்கம்
UPDATED : நவ 21, 2023 12:00 AM
ADDED : நவ 21, 2023 02:10 PM
விருதுநகர்:
மாநில அளவில் 6,7,8 வகுப்புகளுக்கு ஒரே கேள்வித்தாள் தேவையற்றது, என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது:
சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் 6 முதல் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளார். இதில் டிச. 11 துவங்கி 21 வரை தேர்வுகள் நடக்கின்றன. வழக்கமாக உயர்நிலை வகுப்புகளுக்கு துவங்கிய சில நாட்கள் கழித்து தான் நடுநிலை வகுப்புகளான 6, 7, 8 க்கு தேர்வு துவங்கும்.ஆனால் தற்போது ஒரே நேரத்தில் துவங்குகின்றனர். இதனால் குறிப்பிட்ட தேதிக்குள் பாடத்திட்டத்தை முடிக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் மழைக்காலமாக இருப்பதால் மழை பெய்து விடுமுறை விடப்படவும் வாய்ப்புள்ளது.மாநில அளவில் ஒரே வினாத்தாளை கொண்டு 6, 7, 8 வகுப்புகளுக்கு தேர்வு வைப்பது தேவை இல்லாதது. இது மாணவர்களுக்கு தேர்வு மீதான அச்சத்தை மேலும் அதிகரிக்கும். தேதி மாற்றம் செய்ய வேண்டும். மாநில அளவில் ஒரே வினாத்தாள் முறையை அரையாண்டு தேர்வில் கொண்டு வருவதையும் கைவிட வேண்டும், என்றார்.
