பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கணும்: சமூக நலத்துறையினர் அறிவுறுத்தல்
பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கணும்: சமூக நலத்துறையினர் அறிவுறுத்தல்
UPDATED : நவ 23, 2023 12:00 AM
ADDED : நவ 23, 2023 05:52 PM
உடுமலை:
வளர் இளம் பருவ மாணவர்கள், தங்களின் புகார்களை பதிவு செய்ய, புகார் பெட்டி அமைப்பதில் அரசு பள்ளிகள் முக்கியத்துவம் வழங்காமல் உள்ளது.பள்ளிக்குழந்தைகள் பல்வேறு சூழ்நிலையால், மனதளவில் பாதிக்கப்படுவது, அவர்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் என பல்வேறு பிரச்னைகள் குறித்தும், சமூக நலத்துறையின் சார்பில் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மாணவியர் மட்டுமின்றி, மாணவர்களும் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிப்பதற்கான உதவி எண்கள் குறித்து உடுமலை கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளில் சமூக நலத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு செய்கின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான பள்ளிகளில் முக்கியத்துவம் இல்லை என அலுவலர்கள் கூறுகின்றனர்.சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அல்லது பாலியல் வன்கொடுமைகள் குறித்து, புகார் தெரிவிப்பதற்கு புகார் பெட்டி வைக்க வேண்டும் என பள்ளிகளில் அறிவுறுத்துகிறோம்.ஆனால் இதுவரை, 90 சதவீத பள்ளிகளில் அவ்வாறு ஒன்று அமைக்கப்படவில்லை. மாணவர்களுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு வழங்குவதில்,பள்ளிகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
