UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:38 AM
மதுரை:
மதுரை அண்ணா நகர் கிளை நுாலகம் முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டதால், அங்கிருந்த 24 ஆயிரம் புத்தகங்கள் தல்லாகுளம் அங்கன்வாடி மையத்தில் யாருக்கும் பயனின்றி கிடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.அண்ணாநகர் எல்.ஐ.ஜி., காலனியில் 2007 முதல் மாநகராட்சி கட்டடத்தில் கிளை நுாலகம் செயல்பட்டது. மழைநீர் கசிந்து புத்தகங்கள் பாதித்தன. கட்டடத்தை மராமத்து செய்ய மாநகராட்சிக்கு நுாலகக் கிளை சார்பில் வலியுறுத்தப்பட்டது. நவ.,17ல் மாநகராட்சி அதிகாரிகள் விசிட் செய்து நுாலக கட்டடம் பயன்படுத்தத்தக்கது அல்ல. உடனே காலி செய்யுங்கள் என்றனர். மாற்று ஏற்பாடு செய்யாமல் நுாலகத்தின் 24 ஆயிரம் புத்தகங்கள், 23 ரேக்குகள் உள்பட பொருட்கள் தல்லாகுளம் அங்கன்வாடி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நவ.17 முதல் கிளை நுாலகம் பூட்டப்பட்டது.வாசகர்கள் கூறியதாவது:
இங்கு 1,354 வாசகர்கள் உறுப்பினராக உள்ளனர். 1300க்கும் மேலாக போட்டித் தேர்வு புத்தகங்கள் உள்ளன. தினமும் 50க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நுாலகம் பூட்டப்பட்டது. மாற்று இடம் ஒதுக்கி தந்திருக்கலாம். அல்லது மாற்று இடம் கிடைக்கும் வரை நுாலகம் செயல்பட அனுமதித்திருக்கலாம்.வாசகர்கள் புத்தகங்களை எடுத்து செல்ல முடியவில்லை. எடுத்துச் சென்றவர்கள் திரும்ப வழங்க வருகின்றனர். அவர்களிடம் மாற்றுத்திறனாளி நுாலகர் பாண்டியன், கட்டடத்திற்கு வெளியே அமர்ந்து பெற்று வருகிறார், என்றனர். நுாலகம் தரப்பில் கேட்ட போது, மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்குள் வாடகைக்கு கட்டடம் தேடுவதாக தெரிவித்தனர்.
