வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்: வேளாண் பல்கலை இயக்குனர்
வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்: வேளாண் பல்கலை இயக்குனர்
UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:41 AM
பெரியகுளம்:
புதுமையான வேளாண் திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க மாணவ மன்ற செயல்பாடுகள் உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை இயக்குனர் பாலசுப்பிரமணியன் பேசினார்.பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் 34 வது மாணவ மன்றத்தை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இயக்குனர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து பேசுகையில்:
மாணவ மன்றங்கள் இளம் விஞ்ஞானிகளின் கல்வி, திறமை, தொண்டு உள்ளத்தை பிரதிபலிக்கிறது. வருங்காலத்தில் வேளாண், தோட்டக்கலை ஆராய்ச்சி, வளர்ச்சியிலும் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானவை. ஏனெனில் நம் நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உற்பத்தி பெருக்கம் மிக அவசியம்.இளம் வேளாண் விஞ்ஞானிகள் புதுமையான வேளாண் திட்டத்தை, விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் அறிவாற்றலை மேம்படுத்த மாணவ மன்ற செயல்பாடுகள் உறுதுணையாக இருக்கும் என்றார். கல்லூரி முதல்வர் ராஜாங்கம் பேசினார். மாணவ மன்ற ஆலோசகர் பாக்கியவதி, விளையாட்டு துறை இயக்குனர் பார்த்திபன் மாணவ மன்ற செயலாளர்களை அறிமுகப்படுத்தி, நடப்பாண்டிற்கான பணியினை விளக்கினார்.பேராசிரியர்கள் முத்தையா, ராமர், முத்துலட்சுமி, நாகேஸ்வரி, ஜானவி, வெங்கடேசன், பார்த்திபன், ராஜதுரை, ராஜமாணிக்கம் பங்கேற்றனர். மாணவ மன்றம் சார்பில் 150 இளம் விஞ்ஞானிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. துணை பேராசிரியை செண்பகவள்ளி நன்றி கூறினார்.
