வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்: ஆசிரியர்கள் அறிவிப்பு
வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்: ஆசிரியர்கள் அறிவிப்பு
UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:55 AM
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு அறிவிக்கப்பட்ட போட்டி தேர்வை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், சென்னையில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சித்தனர்.அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை, போலீசார் திடீரென ரத்து செய்து, போராட வந்தவர்களை கைது செய்தனர். பின், சமூக நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வேன்களில் ஏற்றி, சென்னைக்கு வெளியிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் இறக்கி விட்டனர்.இந்நிலையில், நேற்று காலை பட்டதாரிகளில் ஒரு தரப்பினர், சென்னை வடபழனியில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்க முயன்றனர். அப்போது, போலீசார் தலையிட்டு அவர்களை ஆணையத்துக்குள் செல்லாமல் தடுத்தனர். இதன்பின், பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து, 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற, ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வு அரசாணையை ரத்து செய்வதாக, சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 177 வது வாக்குறுதியாக அது இடம் பெற்றுள்ளது.ஆனால், ஆட்சிக்கு வந்த பின், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எங்களை போராட விடாமல் கைது செய்கின்றனர். எனவே, வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து, தி.மு.க., அரசுக்கு எதிராக வாக்காளர் அடையாள அட்டையை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்த உள்ளோம். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
