நெரிசலில் 4 மாணவர்கள் பலி; நிபுணர் குழு அமைக்கிறது கேரளா
நெரிசலில் 4 மாணவர்கள் பலி; நிபுணர் குழு அமைக்கிறது கேரளா
UPDATED : நவ 27, 2023 12:00 AM
ADDED : நவ 27, 2023 09:43 AM
கொச்சி:
கேரளாவின் கொச்சின் பல்கலைக்கழக ஆண்டு விழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க, கேரள அரசு நிபுணர் குழு அமைக்க முடிவு செய்துள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொச்சி அருகே களமசேரியில் உள்ள கொச்சின் பல்கலையில், நேற்று முன்தினம் ஆண்டு விழா நடந்தது. இதன் ஒரு பகுதியாக, லியோ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடல்கள் பாடியுள்ள நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நிகழ்ச்சி துவங்கயிருந்த சில நிமிடங்களுக்கு முன் ஏராளமானோர் திறந்தவெளி அரங்கத்தில் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, கொச்சி பல்கலையைச் சேர்ந்த அதுல் தம்பி, அன் ருப்தா, சாரா தாமஸ் ஆகிய மூன்று மாணவர்களும், பாலகாட்டைச் சேர்ந்த ஆல்வின் என்ற இளைஞரும் உயிரிழந்தனர்; 60 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக, கொச்சின் பல்கலை வேந்தர், உயர்கல்வித் துறை முதன்மை செயலரிடம், உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து அறிக்கை கேட்டுள்ளார். அனைத்து தரப்பு அறிக்கைகளை பெற்ற பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.இந்நிலையில், கொச்சி பல்கலை விபத்து தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் அவசர கூட்டத்தை கூட்டினார். அதில், விபத்து தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழு அமைக்க முடிவு செய்தனர். இக்குழு, எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க விதிமுறைகளை உருவாக்கும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
