தேசிய கீதத்தில் குறுக்கீடு; தலைமை ஆசிரியர் மீது புகார்
தேசிய கீதத்தில் குறுக்கீடு; தலைமை ஆசிரியர் மீது புகார்
UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 09:38 AM
சென்னை:
காலை வழிபாட்டு கூட்டத்தில், தேசிய கீதத்தை அவமதித்ததாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.கோவை மாவட்டம், ஆலந்துறை அரசு மேல்நிலை பள்ளி கலை ஆசிரியர் ராஜ்குமார், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:
எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன், இந்த ஆண்டு, நவ., 1 முதல் விடுமுறை எடுத்து, வெளிநாடு சென்று விட்டார். அவருக்கு பதில், மத்வராயபுரம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், கூடுதல் பொறுப்பாக தலைமை ஆசிரியர் பணியை கவனிக்கிறார்.கடந்த 21ம் தேதி காலை வழிபாட்டு கூட்டம் நடந்தது. அதன் நிறைவில், தேசிய கீதம் பாடப்பட்டது; அது முடிவதற்குள், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், மாணவர்களை இடைமறித்து, தேசிய கீதம் பாடுவதை நிறுத்தி விட்டார்.அதையடுத்து, மாணவர்கள் மத்தியில் அவர் பேசத் துவங்கினார். அவர் பேசி முடித்ததும், மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டு, கூட்டம் முடிந்தது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
