UPDATED : பிப் 01, 2010 12:00 AM
ADDED : பிப் 01, 2010 11:07 AM
கோவை வேளாண் பல்கலையில் உள்ள தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், நகரவாசிகளுக்கான ஐந்து சான்றிதழ் பாடங்கள் உள்ளன. இப்பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கப்பட்டுள்ளது. இது பற்றி வேளாண் பல்கலையின் தொலைநிலைக் கல்வி இயக்குனர் வள்ளுவபாரிதாசன் கூறியதாவது:
நில எழிலூட்டல் மற்றும் அலங்காரத் தோட்டம்: இந்த சான்றிதழ் படிப்பில், உட்புறம் மற்றும் வெளிப்புற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற செடி வகைகளை தேர்வு செய்வது, நில எழிலூட்டல், கோட்பாடு மற்றும் அலங்காரத் தோட்டம், பாறைகளைக் கொண்டு தோட்டம் அமைத்து பராமரிப்பது, நீர் பாசனத்தின் முக்கியத்துவம், நீரூற்று, செயற்கை அருவி அமைப்பது ஆகியவற்றுக்கான பயிற்சிகள் இடம் பெறும்.
நாற்றங்கால் தொழில் நுட்பம்: இதில் நாற்றங்கால் அமைக்கும் வழிமுறை, விதை நேர்த்தி, மண் மற்றும் மண் சுகாதாரம், விதைப் பெருக்கம், ஓட்டுக் கட்டுதல், மொட்டுக் கட்டுதல், செடிகளை பார்வைக்கு வைக்கும் முறை, பராமரித்தல் மற்றும் பூச்சி நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் விவரிக்கப்படுகின்றன.
வணிகரீதியான தோட்டக்கலை தொழில் நுட்பங்கள்: இதில் பயிர் பெருக்க முறைகளின் அடிப்படை கோட்பாடு, வீடு, அலுவலகங்களில் வைக்கும் செடிகள், அலங்காரத் தோட்டம், வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்தல், பூக்கள், காய்கறிகளில் விதை உற்பத்தி ஆகியன இடம் பெறுகிறது.
திடக்கழிவு மேலாண்மை: வேளாண்மை பண்ணை மற்றும் மருத்துவமனை திடக்கழிவு மேலாண்மை முறைகள், மண் புழு தயாரித்தல் தொழில் நுட்பம் பற்றி விளக்கப்படுகிறது.
காளான் வளர்ப்பு: காளான் வளர்ப்பு முறைகள், மூலப் பொருட்கள் தேர்வு, காளான் பதப்படுத்தி பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயாரிப்பது ஆகியன விளக்கப்படுகிறது.
இப்படிப்புகளில் சேர, ஆங்கிலத்தில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பயிற்சி காலம் ஆறு மாதங்கள். நகர்ப்புறங்களில் வசிக்கும் இல்லத்தரசிகள், கட்டடக் கலை நிபுணர்கள், உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர்கள், வேலையில்லாத பட்டதாரிகள் இப்படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம்.
இதற்கான விண்ணப்பங்களை ‘இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை-641003’ என்ற முகவரிக்கு ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். 94421 11047 என்ற மொபைல் எண் அல்லது www.tnau.ac.in என்ற வெப்சைட் முகவரியை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.
