தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடுத்த ‘பில்கேட்ஸ்’ ஒரு இந்தியராக இருக்க வேண்டும்

அடுத்த ‘பில்கேட்ஸ்’ ஒரு இந்தியராக இருக்க வேண்டும்

அடுத்த ‘பில்கேட்ஸ்’ ஒரு இந்தியராக இருக்க வேண்டும்


UPDATED : பிப் 01, 2010 12:00 AM

ADDED : பிப் 01, 2010 02:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2010 12:00 AM ADDED : பிப் 01, 2010 02:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “உலகை ஆளும் ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டம்’ இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும். அடுத்த ‘பில்கேட்ஸ்’ ஒரு இந்தியராக இருக்க வேண்டும்,” என்று விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை கூறினார்.


கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் மேனேஜ்மென்ட் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக் கழக முதன்மை விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை பேசியதாவது:


கம்ப்யூட்டர்களின் தாயகம் இந்தியா. வேத காலம் முதலே நம் நாடு அறிவியல், தொழில் நுட்ப சிறப்புகள் பெற்று வந்துள்ளது. உலகின் பிற விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, பல முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை இந்திய வேத துறவிகளும் ஞானிகளும் கண்டறிந்துள்ளனர்.


இந்திய பாதுகாப்புத் துறையில் கம்ப்யூட்டர் மென்பொருட்களின் பங்கு முக்கியமானது. ராக்கெட், போர் விமானங்கள் தயாரிப்பது முதல் அவற்றை விண்ணில் செலுத்துவது வரை மென்பொருட்கள் உதவுகின்றன. துல்லியமாக திட்டமிட்டு செயல்படும் மென்பொருட்களை உருவாக்க வேண்டும். நம் நாட்டில் இன்று 35 வயதுக்கு உட்பட்ட 540 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர். இந்த மகத்தான சக்தியை சரியாக பயன்படுத்திக் கொள்ள, உலகளவில் தேவைப்படும் சிறப்புத் திறன் பெற்ற இளைஞர்களை உருவாக்குவது, உலகளவில் தேவைப்படும் உயர்கல்வி பெற்ற இளைஞர்களை உருவாக்குவது ஆகிய இரு முக்கிய அம்சங்களில் நமது பல்கலைகள் ஈடுபட்டுள்ளன.


நாம் அனைவரும் இப்போது கம்ப்யூட்டரில் அமெரிக்க ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கான புரோகிராம்களை எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். உலகம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய, இந்தியர்களால் சொந்தமாக வடிவமைக்கப்படும் ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை நாம் எப்போது உருவாக்கப் போகிறோம்? நம் நாட்டின் கம்ப்யூட்டர் மென்பொருள் பொறியாளர்களால் இது முடியும்.


நம்மால் உருவாக்கப்பட்ட சொந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை(கம்ப்யூட்டர் இயக்குதளம்) விரைவில் உருவாக்க வேண்டும். இனி வருங்காலங்களில் கம்ப்யூட்டர்களில் தகவல்களை பாதுகாப்பது பெரும் சவால் ஆகி விடும். ஒரு நாட்டில் இருந்தபடி மற்றொரு நாட்டின் கம்ப்யூட்டர்களை இயக்க முடியும். ஆகவே நமது அரிய தகவல்களை பாதுகாக்க, நமக்கென சொந்தமான பாதுகாப்பு முறைகளை உருவாக்க வேண்டும்.


உலகம் முழுதும் ஐ.டி., புரட்சி தொடர்கிறது. பொறியியல் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் ஐ.டி., பின்னி பிணைந்துள்ளது. இனி வருங்காலங்களில் இந்திய ஆபரேட்டிங் சிஸ்டம்தான் உலகை ஆளும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ‘பில்கேட்ஸ்’ ஒரு இந்தியனாக இருப்பார் என தீவிரமாக நம்புகிறேன். இந்த நிலையை அடைய கடும் சோதனைகளை சந்திக்க வேண்டியதிருந்தாலும், தளராத முயற்சியால் அவற்றை தகர்த்து, இந்திய நாட்டை உலகின் முன்னணி நாடாக மாற்ற வேண்டும். இவ்வாறு, விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பேசினார்.


கல்லூரியின் 2006-2009ம் ஆண்டின் சிறந்த மாணவராக தேர்வு பெற்ற பூபதிராஜா மற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்த சண்முகப்ரியா, பூபதிராஜா, ரமேஷ்குமார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் அசோக், அறங்காவலர் திவ்யலஷ்மி, இயக்குனர் ரவி, செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


மீண்டும் எழுகிறது ஐ.டி., துறை


“இன்று தகவல் தொழில் நுட்ப துறை(ஐ.டி) நிலையான வளர்ச்சிப் பாதையில் உள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 1997-1998ல் 1.2 சதவீதமாக இருந்த ஐ.டி., துறையின் பங்களிப்பு, 2008-2009ல் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பீ.பி.ஓ., துறையில் ஆறு சதவீத வளர்ச்சியுடன் நாம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறோம். இந்த ஆண்டு ஐ.டி., துறையில் 71.7 பில்லியன் ஏற்றுமதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐ.டி., துறையில் வருங்கால இளைஞர்களுக்கு பிரமாதமான வாய்ப்புகள் உள்ளதை அறியலாம்,” என்றார் சிவதாணுப்பிள்ளை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us