சுற்றுலாத்துறைக்கு 2 புதிய பஸ்கள் முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு
சுற்றுலாத்துறைக்கு 2 புதிய பஸ்கள் முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு
UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 04:54 PM
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், புதிதாக வாங்கப்பட்டுள்ள, இரண்டு வால்வோ சொகுசு பஸ்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அப்பஸ்களின் முதல் பயணமாக, மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியர், மாமல்லபுரம் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு - ஒகேனக்கல், மைசூரு - பெங்களூரு, குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு, மூணார் என, பல்வேறு சுற்றுலா பயண திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டத்திற்காக, 14 சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதிதாக 2.92 கோடி ரூபாய் செலவில், இரண்டு வால்வோ சொகுசு சுற்றுலா பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாட்டை, முதல்வர் ஸ்டாலின் தன் முகாம் அலுவலகத்தில், நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பஸ்களில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியர், நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அம்மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், காலை சிற்றுண்டி வழங்கி, வழியனுப்பி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதா ஜீவன், ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை செயலர் மணிவாசன், கமிஷனர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
