தலைமை ஆசிரியர், ஊழியர் மீது மாணவியரின் பெற்றோர் புகார்
தலைமை ஆசிரியர், ஊழியர் மீது மாணவியரின் பெற்றோர் புகார்
UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 10:01 AM
மைசூரு:
சுற்றுலா சென்ற மாணவியரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர் மீது பொதுக் கல்வி துறை துணை இயக்குனரிடம் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.மைசூரு மாவட்டம், சர்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 75 பேர், சில நாட்களுக்கு முன்பு பேலுார், ஹளேபீடு, தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா, கார்காலா, சிருங்கேரி, முருடேஸ்வரா உட்பட பல ஊர்களுக்கு கல்வி சுற்றுலா சென்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர் ஆகியோர் குடிபோதையில் மாணவியருடன் நடனமாடி, முத்தமிட்டு தவறாக நடந்து கொண்டனர். முருடேஸ்வராவில் கடலில் விளையாடும்போது, தவறான இடங்களை தொட்டதாக, சுற்றுலாவுக்கு வந்த ஆசிரியர்களிடம் மாணவியர் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியரை, ஆசிரியர்கள் தங்கள் கண்காணிப்பில் அழைத்து வந்தனர். இது தொடர்பாக பெற்றோரிடம், மாணவியர் புகார் தெரிவித்தனர்.ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்றனர். இதையறிந்த தலைமை ஆசிரியர், பள்ளியில் இருந்து தப்பியோடிவிட்டார். அங்கிருந்த ஊழியர், தன் தவறை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பொதுக் கல்வி துறை துணை இயக்குனர் பாண்டுவிடம் புகார் செய்தனர். அவரும், இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி, பிளாக் கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
