UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:43 AM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து அலுவலர்கள், பேராசிரியர்கள் துணைவேந்தர் குமாரை 6 மணிநேரம் சிறைபிடித்து முற்றுகையிட்டனர்.பல்கலை நிதிநிலை காரணமாக நவம்பருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. அரசிடம் பேசி துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிச. 4 முதல் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.நேற்று இப்பல்கலை கூட்டுநடவடிக்கை குழு (எம்.கே.யு., ஜாக்) நிர்வாகிகள் முத்தையா, வேளாங்கண்ணி ஜோசப், முருகன், பார்த்தசாரதி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் காலை 11:00 மணிக்கு துணைவேந்தர் அறைக்குள் சென்றனர். அவரை வெளியேறவிடாமல் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.அப்போது, 9 மாதங்களாக சம்பளம் வழங்குவதில் இதுபோன்ற பிரச்னை உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்கலை நிலவரத்தை அரசிடம் கொண்டு செல்ல வேண்டும். ஓய்வூதியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து டிச. 14 சென்னை சென்று அதிகாரிகளை சந்திப்பதாக துணைவேந்தர் தெரிவித்தார். இதன்பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
