மாநகராட்சி பள்ளிகளில் மேம்பாட்டு பணி தேவை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
மாநகராட்சி பள்ளிகளில் மேம்பாட்டு பணி தேவை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
UPDATED : டிச 14, 2023 12:00 AM
ADDED : டிச 14, 2023 05:33 PM
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள் மேம்படுத்த தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 135 துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கொரோனாவுக்கு பின், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், பள்ளிகளில் இடப்பற்றாக்குறை, கழிப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன.பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் பள்ளிகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நமக்கு நாமே திட்டம், ரோட்டரி சங்கம் வாயிலாக கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டும் வகையிலும் பணிகள் நடந்து வருகிறது. அவ்வகையில், காந்தி நகர் ரோட்டரி, தெற்கு மற்றும் திருப்பூர் ஆனந்தம் ரோட்டரி வாயிலாக வி.கே., அரசு மேல்நிலை பள்ளியர் மாணவியருக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.இது குறித்து, மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், இது வரை 75 கூடுதல் வகுப்பறைகளும், 86 கழிப்பிடங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 35 பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் வகையில் 1.75 கோடி ரூபாய் மதிப்பில், பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 100 பள்ளிகளில் என்ன பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலேஜ் ரோடு, சந்திரகாவி நடுநிலைப் பள்ளியில், 1.86 கோடி ரூபாயில் பணிகளும், பத்மாவதிபுரம் பள்ளியில், ஆறு வகுப்பறை, மூன்று ஆய்வுக்கூடம் மற்றும் 10 கழிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. காங்கயம் ரோடு மற்றும் சுற்றுப்பகுதி மாணவர்கள் பயனடையும் விதமாக, அப்பகுதியில் புதிய பள்ளி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
