அரசு பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஜவ்வு
அரசு பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஜவ்வு
UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 09:36 AM
பந்தலுர்:
பந்தலுார் எருமாடு மராடி பகுதியில் அரசு பள்ளி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டும், அதனை அகற்றுவதில் அதிகாரிகள் தாமதம் செய்வது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பந்தலுார் அருகே எருமாடு மராடி பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு, 3.5 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அதனை பலரும் கையகப்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். கூடலுார் ஊராட்சி ஒன்றியம் மூலம் அரசு பள்ளி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.அப்போது, பள்ளிக்குரிய நிலத்தை சர்வே செய்யாமல் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கடந்த வாரம் வருவாய் துறை மூலம் நில அளவை செய்யப்பட்டது. அதில், பள்ளியின் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து, வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இணைந்து, ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளிக்குரிய நிலத்தை மீட்டு தர வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தினர்.பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், பள்ளி நிலம் சர்வே செய்யப்பட்டது குறித்து கூடலுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் நாளில் தகவல் தெரிவித்தால் வருவாய் துறையினர் நேரில் சென்று அதற்கான பணியில் ஈடுபடுவர், என்றார்.கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை கூறுகையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து முறையான அறிக்கை எனக்கு கிடைக்கவில்லை. அறிக்கை கிடைத்த பின்னரே ஆக்கிரமிப்பு அகற்ற இயலும், என்றார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்பினா கூறுகையில், சர்வே செய்த பின்பும் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அலட்சியம் காட்டி வருவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் நேரில் புகார் தெரிவித்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முடிவு செய்துள்ளோம், என்றார்.
