மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: விசாரணை நடப்பதாக அரசு தகவல்
மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: விசாரணை நடப்பதாக அரசு தகவல்
UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 02:00 PM
சென்னை:
அ.தி.மு.க., ஆட்சியின் போது, 11 மருத்துவ கல்லுாரிகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில், விரிவான விசாரணை நடப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
அ.தி.மு.க., ஆட்சியில், மருத்துவ கல்லுாரிகள் இல்லாத கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி ஆகிய, 11 மாவட்டங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டன.அவை தேசிய மருத்துவ கமிஷன் வகுத்த வழிமுறைகளின்படி இல்லை. அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு, கணிசமான தொகையை லஞ்சமாக கொடுத்துள்ளனர். கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டு சதி செய்து, கோடிக்கணக்கில் பொது மக்கள் பணத்தை சுருட்டியுள்ளனர்.பொதுப்பணி துறையை கவனித்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, முதன்மை தலைமை பொறியாளராக இருந்த ராஜ்மோகன் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கூட்டு சதியில் தொடர்பு உண்டு. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.மத்திய, மாநில அரசுகளின் நிதியில், இந்த மருத்துவக் கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளதால், என் புகாரை விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபுமுத்துமீரான் ஆஜராகி, அண்ணா பல்கலையை சேர்ந்த மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, கட்டுமானங்கள் குறித்து ஆய்வு நடக்கிறது. விரிவான விசாரணை நடக்கிறது, என்றார்.லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மனுதாரர் தரப்பில் திருப்தி தெரிவித்ததால், மனுவின் விசாரணையை முடித்து வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.
