மாணவரை தாக்கியதாக காழ்ப்புணர்ச்சியில் வீடியோ வெளியிட்ட ஆசிரியர் மீது புகார்
மாணவரை தாக்கியதாக காழ்ப்புணர்ச்சியில் வீடியோ வெளியிட்ட ஆசிரியர் மீது புகார்
UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 06:06 PM
திருக்கனுார்:
கூனிச்சம்பட்டில் அரசு பள்ளி மாணவனை தலைமை ஆசிரியர் தாக்கியதாக பரவிய வீடியோவிற்கு, பெற்றோர் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஆசிரியர் மீது புகார் செய்துள்ளனர்.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு காலனியை சேர்ந்தவர் நரசிங்கம், 45; கூலி தொழிலாளி. இவரது மகன் கூனிச்சம்பட்டு பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், மாணவன், சக மாணவியை இடித்ததற்காக, பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னை காதில் திருகியபோது, காயம் ஏற்பட்டதாக கூறும் வீடியோ சமூக வலை தளத்தில் நேற்று வைரலானது. இதையடுத்து, திருக்கனுார் போலீசார் நேற்று பள்ளிக்கு சென்று, மாணவன் மற்றும் மாணவனின் தந்தை நரசிங்கத்திடம் விசாரணை நடத்தினர்.அதில், மாணவனுக்கு ஏற்கனவே காதில் காயம் இருந்ததாகவும், அதற்காக தலைமை ஆசிரியர் மருந்து தடவியதை கண்ட சக ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, மாணவனிடம் தலைமை ஆசிரியர் அடித்ததால்தான் மாணவனின் காயம் ஏற்பட்டதாக கூறச் சொல்லி, வீடியோ எடுத்ததுடன், அதனை எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக மாணவனின் தந்தை நரசிங்கம் போலீசாரிடம் தெரிவித்தார்.மேலும், தனது மகனின் வீடியோவை பெற்றோர் அனுமதியின்றி சமூக வலைதளத்தில் பரப்பியதற்காக, அந்த ஆசிரியர் மீது புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் கூனிச்சம்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
