UPDATED : டிச 17, 2023 12:00 AM
ADDED : டிச 17, 2023 10:13 AM
சென்னை:
தமிழக தொல்லியல் துறை சார்பில், நம் பண்பாடு, கலாசாரத்தை தெரிவிக்கும் கல்வெட்டியல், நாணயவியல் ஆய்வுகளை மேம்படுத்துவோம் என, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.தமிழக தொல்லியல் துறை சார்பில் கொண்டாடப்படும், கருணாநிதி நுாற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நேற்று, தொன்மைத் தமிழ்நாடு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்தது. கருத்தரங்க ஆய்வு நுாலை, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
முன்பெல்லாம் பட்ஜெட்டில் துண்டு விழுந்தால், தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் திட்டங்களையே முடக்குவர். தற்போதைய அரசு, நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்குகிறது.தமிழ் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, கட்டடக்கலை ஆகியவற்றை, அகழாய்வுகளின் வாயிலாக மீட்டு, நம் தொன்மையையும், தொடர்ச்சியையும் காக்க தொல்லியல் துறை முயல்கிறது. அதுமட்டுமின்றி, கல்வெட்டியல், நாணயவியல் ஆய்வுகளை மேம்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்கிறது.ஆய்வில் கிடைக்கும் தகவல்கள், ஆட்சியாளர்களுக்கு மாறுபட்ட கருத்தாக இருந்தாலும், அவற்றையும் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்போது தான், வரலாற்றை செம்மைப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், கருணாநிதி தன் எழுத்தில், தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாட்டை வெளிப்படுத்தினார். அவர், காந்திக்கு அடுத்தபடியாக இரண்டு லட்சம் பக்கங்களுக்கு மேல் எழுதிய அரசியல்வாதியாவார். அவரின் நுாற்றாண்டில் இந்த கருத்தரங்கம் நடப்பது சிறப்பு என்றார்.நிகழ்வில், சுற்றுலா மற்றும் அருங்காட்சியகங்கள் துறை செயலர் மணிவாசகன், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
