UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 18, 2023 05:30 PM
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் தற்போது 1,000 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். 2012 மார்ச் முதல் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதம் 12 அரை நாட்கள் பணி வழங்கப்பட்டுள்ளது.பணி நிரந்தரம்
பள்ளியில் அரை நாள் பணியாற்றும் இவர்களில் பெரும்பாலானோர் மீதி நாட்களில் வேறு வேலை செய்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் அல்லது முழுநேர பணி வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக, வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில், நேற்று காலை 7:00 மணிக்கு, சென்னை எழும்பூர் அரசு பள்ளிக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் வந்து சேர வேண்டும். இது புயல் நிவாரண பணி தொடர்பானது என குறிப்பிடப்பட்டிருந்தது.இதையடுத்து, நுாற்றுக்கணக்கான ஆண், பெண் பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மிக்ஜாம் புயல் நிவாரண பணியை கண்காணிக்கவும், நிவாரண தொகைக்கு டோக்கன் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி வரை பணி இருக்கும்.கலக்கம்
நேற்று முன்தினம் இரவு தாமதமாக தகவல் கிடைத்த ஆசிரியர்களும், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களும் இதில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளனர். அதேபோல், பகுதிநேரமாக வேறு பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களும் இந்த முகாமில் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளனர்.இந்நிலையில் நிவாரண பணியில் பங்கேற்காத பகுதி நேர ஆசிரியர்கள் குறித்தான பட்டியலை திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பங்கேற்காத ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.சுற்றறிக்கை
ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை சார்பில், பகுதிநேர ஆசிரியர்களை, கல்வி பணியை தவிர இதர பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என, ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும், பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் வெள்ள நிவாரண டோக்கன் வழங்கும் பணியில் பகுதிநேர ஆசிரியர்களை ஈடுபடுத்தியுள்ளது அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்காக தினசரி , அரசு வழங்கும் 200 ரூபாயில் எப்படி உணவு மற்றும் போக்குவரத்து செலவு சரியாகும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
