பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிலங்களில் வேறு கட்டுமானங்கள் கூடாது: ஐகோர்ட்
பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிலங்களில் வேறு கட்டுமானங்கள் கூடாது: ஐகோர்ட்
UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:33 AM
சென்னை:
பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிலங்களில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் அரசின் பயன்பாட்டுக்காக எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவைச் சேர்ந்த கே.கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் வண்ணான்குடிகாடு கிராமத்தில் தொடக்கப் பள்ளிக்காக ஒதுக்கிய இடத்தில் புதிய கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சாந்தனு ஆஜராகி பள்ளி இருந்த இடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுகின்றனர். பள்ளிக்காக 715 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டது. பஞ்சாயத்து அலுவலகம் கட்டினால், பள்ளிக்கு இடையூறாக இருக்கும், என்றார். மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பிளீடர் ஆர்.அனிதா ஆஜராகி பள்ளிக்கான புதிய கட்டடம் கட்டப்படுகிறது. கூரை மட்டம் வரை பணிகள் முடிந்துள்ளன. 103.55 சதுர மீட்டரில் பள்ளி கட்டடம் இருக்கும்.ஏற்கனவே இருந்த பஞ்சாயத்து அலுவலக கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால் 202 சதுர மீட்டரில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. மீதி இடம் பள்ளிக்கான விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்படும், என்றார்.மனுவை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
பள்ளிக்கான நிலத்தில் மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை எங்களால் ஏற்க முடியாது. பள்ளிக்கான இடம் 715 சதுர மீட்டர். புதிய பள்ளி கட்டடம் 103.55 சதுர மீட்டரில் கட்டப்படுகிறது.பஞ்சாயத்து அலுவலகத்துக்காக, 202 சதுர மீட்டர் கட்டிய பின், மீதி உள்ள பகுதி மட்டுமே விளையாட்டு மைதானமாக இருக்கும்.பஞ்சாயத்து கட்டடமும் இதே வளாகத்தில் தான் இருந்துள்ளது. அதை இடித்து புதிதாக கட்டுகின்றனர். அதை இடிக்கும்படி உத்தரவிடுவது முறையாக இருக்காது. எனவே இனிமேல் பள்ளிக்காக ஒதுக்கப்படும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது அரசின் பயன்பாட்டுக்காக எந்த கட்டடங்களையும் கட்டக் கூடாது.இத்தகைய கட்டடங்களால் மாணவர்களுக்கு தான் இடையூறு ஏற்படும். இதுபோன்ற கட்டடங்கள் கட்டப்பட்டால் மாணவர்களுக்கு திறந்தவெளி வசதி மற்றும் இதர வசதிகளை வழங்க முடியாது.ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறைந்தபட்ச இடம் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகளும் மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் அளிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டுக்காக மைதான வசதி இருக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை பஞ்சாயத்து கட்டடம் இருப்பதால் மாணவர்களின் படிப்புக்கும் பாதுகாப்புக்கும் இடையூறு இல்லாமல் இருப்பதை பஞ்சாயத்தும் அரசும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
