குட் டச், பேட் டச் பற்றி ஆசிரியர்களுக்கும் பயிற்சி
குட் டச், பேட் டச் பற்றி ஆசிரியர்களுக்கும் பயிற்சி
UPDATED : டிச 19, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:52 AM
தமிழகத்தில் சில ஆண்டுகளாக, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் தொடர்பான போக்சோ சட்ட வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மூன்று மாதங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போக்சோ வழக்குகளில் கைதாகி உள்ளனர். இதனால், பெற்றோர் மத்தியிலும் கடும் அதிருப்தியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்தான் இரண்டாம் பெற்றோர். அதுபோலவே, பெரும்பாலான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவதுடன், அவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டுதலும் வழங்குகின்றனர். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்கின்றனர்.சில ஆசிரியர்கள், மாணவ- மாணவியரின் தேவைகள் மற்றும் அவர்களின் பலவீனத்தை தவறாக பயன்படுத்துவது, சில நேரங்களில், போக்சோ வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு சென்று விடுகிறது.ஏற்கனவே, மாணவ - மாணவியருக்கு குட் டச், பேட் டச் என்ற உடல் ரீதியாக தொடுதலின் தன்மை குறித்து, விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. வரும் காலங்களில், ஆசிரியர், ஆசிரியைகளுக்கும், குட் டச், பேட் டச் குறித்த, பயிற்சி மற்றும் அறிவுறுத்தல் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சியில், இதை ஒரு அங்கமாக சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
