ஆசிரியைகள் துப்பட்டாவுடன் சுடிதார், சல்வார் அணிய அனுமதி
ஆசிரியைகள் துப்பட்டாவுடன் சுடிதார், சல்வார் அணிய அனுமதி
UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 10:08 PM
தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியைகள், பணிக்கு வரும்போது, சேலை அணிந்து வருகின்றனர். ஆனால், ஆடவர் மற்றும் இரு பாலர் படிக்கும் பள்ளிகளில், சில அசவுகரியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.வரவேற்புஅதனால், சேலைக்கு பதில் சுடிதார் அல்லது உடலை முழுமையாக மறைக்கும் ஆடையை அணிந்து வர, ஆசிரியைகள் விருப்பம் தெரிவித்தனர்.இதற்கு முன் உதாரணமாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் மதுரையில் உள்ள பள்ளிகளில், ஆசிரியைகள் சேலைக்கு மேல், மேலங்கி அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டது.ஆனாலும், சேலையை தவிர்க்க அனுமதி கிடைக்குமா என, ஆசிரியைகள் பலர் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியைகள், இனி பணிக்கு வரும்போது, சேலைதான் அணிந்து வர வேண்டும் என்ற கட்டாயமில்லை.இந்த உடைதான் அணிய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தங்களுக்கு சவுகரிய மான உடையை அரசின் விதிகளின் படி அணிந்து கொள்ளலாம் என, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று அறிவித்துள்ளார். இதற்கு ஆசிரியைகள் தரப்பில், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.அரசாணை
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்து, 2019 ஜூன் 1 வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள நடைமுறை வருமாறு:
அரசு ஊழியர்கள் மிகவும் சுத்தமான, நேர்த்தியான அலுவல் வகை உடைகளை, தங்களது பணி புரியும் அலுவலக இடத்துக்கு ஏற்ப, அணிந்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில், சேலை, துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் ஆடையை, பெண்கள் அணியலாம்.ஆண்களை பொறுத்தவரை, பார்மல் என்ற அலுவல் வகை பேன்ட் அல்லது தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வேஷ்டி அல்லது இந்திய பாரம்பரிய ஆடைகள் அணியலாம். கேஷுவல் எனப்படும், அலுவல் சாரா நேரத்துக்கான ஆடைகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
