UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 10:13 AM
சென்னை:
உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 131 பணியிடங்களை நேரடி தேர்வு முறையில் நிரப்பியதில் நடந்த குளறுபடிகளால், சி.எம்.டி.ஏ., நிர்வாகத்துக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 131 பணியிடங்களுக்கு நேரடி தேர்வு, 2020ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பில் பணியிடங்களுக்கான வயது வரம்பு முறையாக அறிவிக்கப்படவில்லை. இதனால், யார் எப்படி விண்ணப்பிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில், 2021 ஜனவரியில் அவசரகதியில் இப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு பிப்ரவரியில், தேர்தல் நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில், அவசரகதியில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இதில் பணியாளர்களின் வயது வரம்பு, கல்வி தகுதி விபரங்கள் முறையாக சரிபார்க்கப்படவில்லை என புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் ஆணை பெற்றவர்கள், பணியில் சேர்ந்தனர்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், 131 பணியாளர் தேர்வு நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 18 பேரின் வயது உள்ளிட்ட தகுதிகளில் தவறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 18 பேரை ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.இதில் பாதிக்கப்பட்ட பணியாளர்கள், உயர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அவசரகதியில் அளிக்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டது. இதன் பின் சில மாதங்கள் கழித்து, ஒன்பது பேருக்கு புதிதாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில், 7 பேர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.இது குறித்து பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கூறியதாவது:
இந்த வழக்கு விசாரணையின் போது, வயது வரம்பு தவறு இருக்கிறது என்றால், சி.எம்.டி.ஏ.,வில் இதுவரை எத்தனை பேருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இதுவரை, 160க்கும் மேற்பட்டோருக்கு சி.எம்.டி.ஏ.,வில் சலுகை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்கில் வந்துள்ள நபர்களுக்கு ஏன் சலுகை வழங்கக்கூடாது என்ற கேள்வியில் இந்த வழக்கு நிற்கிறது.இந்நிலையில், 131 பேர் தேர்வில் பல்வேறு தவறுகள் இருக்கும் நிலையில் இந்த குறிப்பிட்ட சிலர் விஷயத்தில் மட்டும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இவ்வளவு கடுமையாக நடப்பது ஏன் என, நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை மொத்தமாக ஆய்வு செய்ய நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு சட்ட சிக்கல் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
