அரசு பள்ளிகள், அங்கன்வாடிக்கு ரூ.2.48 கோடியில் கட்டடங்கள்
அரசு பள்ளிகள், அங்கன்வாடிக்கு ரூ.2.48 கோடியில் கட்டடங்கள்
UPDATED : டிச 22, 2023 12:00 AM
ADDED : டிச 22, 2023 09:50 AM
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையம், அதன் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், சுற்றுப்புற பகுதிகளில் மேம்பாட்டு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1.14 கோடி ரூபாய் மதிப்பில், தரை, மேல்தளங்களில், நான்கு வகுப்பறைகளுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.மேலும், மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதி அங்கன்வாடிக்கு, 21.43 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டது.திருக்கழுக்குன்றம் அடுத்த, பட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1.13 கோடி ரூபாய் மதிப்பில், தரை, மேல்தளங்களில், நான்கு வகுப்பறைகளுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் ராஜேஷ், அணுமின் நிலைய இயக்குனர் சுதிர் ஷெல்கே ஆகியோர் திறந்து வைத்து, மாணவ - மாணவியருக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கினர்.இதுகுறித்து அவர்கள் பேசியதாவது:
அதிகனமழை பெய்வது ஆராயப்படுகிறது. புவிவெப்பமடைவதும் ஒரு காரணமாக இருக்கலாம். கார்பனை வெளியிடும் நிலக்கரி மின் உற்பத்தியை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுமின் உற்பத்தி பெருக வேண்டும்.மேலும், எங்களின் சமூக பொறுப்பாக, கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டடங்கள் கட்டி வருகிறோம். சுற்றுப்புற மக்களை, எங்களின் அங்கமாகவே கருதுகிறோம்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
