UPDATED : டிச 22, 2023 12:00 AM
ADDED : டிச 22, 2023 10:16 AM
கோவை:
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வினாவங்கி வெளியிட்டு விற்பனை செய்யப்படுகிறது.பாடத்திட்டம் மாற்றிய பிறகு, வினாவங்கி வெளியிடாததோடு, ப்ளூ பிரிண்ட் வழங்காததால், மெல்ல கற்கும் மாணவர்கள், திணறுகின்றனர். இவர்களுக்காக விரைவில் வினாவங்கி வெளியிட வேண்டுமென, தினமலர் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டது.தொடர்ந்து, வினாவங்கியை, அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். கோவையில், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், வரும் 26ம் தேதி முதல், பள்ளி வேலை நேரத்தில், பெற்றோருடனோ அல்லது அந்தந்த பள்ளி மூலமாகவோ வினாவங்கி பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கில வழி மாதிரி வினாத்தாள் புத்தகம் ரூ. 120 மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கான கணித தீர்வு புத்தகம் 175 ரூபாய்க்கு விற்கப்படும். பிளஸ் 2 மாதிரி வினாத்தொகுப்பு மற்றும் கணித தீர்வு புத்தகம் தலா 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
