பொதுத்தேர்வு முடியும் வரை பாடங்களை மட்டும் ஆசிரியர்கள் கற்பிக்க கோரிக்கை
பொதுத்தேர்வு முடியும் வரை பாடங்களை மட்டும் ஆசிரியர்கள் கற்பிக்க கோரிக்கை
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:53 AM
நாமக்கல்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடியும் வரை, பள்ளி பாடங்களை மட்டுமே ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தற்போது பள்ளி வேலை நாளில் மாலை, 4:00 முதல், 5:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. தினமும் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் செல்வதால், பாடவேளையில் கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களான டிச., 26 முதல் ஜன., 20 வரை பயிற்சி வகுப்புகள், அனைத்து பள்ளிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.விடுமுறை நாட்களிலும், ஒரு ஆசிரியர் வீதம் சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க வேண்டும். எனவே ஆசிரியர்களும் மனதளவில் சோர்வடைந்துள்ளனர். எனவே விடுமுறையில் நடத்தப்பட உள்ள பயிற்சி வகுப்புகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு முடிந்த பிறகு, மறுநாள் முதல் வட்ட அளவில் அல்லது மாவட்ட அளவில் உண்டு உறைவிட பள்ளிகளை ஏற்படுத்தி, அதில் நுழைவுத்தேர்வு பயிற்சி அளிக்கலாம். பொதுத்தேர்வு முடியும் வரை, ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பாடங்களை மட்டும் நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
