UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 09:59 PM
சென்னை:
சென்னை, தமிழ் இசை 81ம் ஆண்டு விழா, ராஜா அண்ணாமலை மன்றத்தில், நடந்தது.இதில், டி.கே.எஸ்., கலைவாணனுக்கு, &'இசைப் பேரறிஞர்&' பட்டம்; குமார வயலுார் திருஞான சம்மந்தம் ஓதுவாருக்கு, பண் இசைப் பேரறிஞர் பட்டம், பொற்பதக்கம், வெள்ளிப் பேழை, 10,000 ரூபாய் வழங்கப்பட்டது.விழாவில், தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பங்கேற்று, அறிஞர்களுக்கு பட்டமும், இசை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கினார்.விழாவில் அவர் பேசியதாவது:
திருமுறைகளை இசையோடு பாடும்போது, சிறகுகள் முளைத்து விடுகிறது. இசை என்பது, கலைகளின் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது. கலைகளில் துாய்மையானது இசை; அறிவியலில் துாய்மையானது கணிதம்; ஆன்மிகத்தில் துாய்மையானது தியானம்.குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே, இசையை உணர்ந்து விடுகிறது. அதனால் தான், தாய் மொழியை எளிதில் கற்கிறது. தமிழர்கள் இசையோடு பிறக்கின்றனர்; வாழ்கின்றனர். தமிழ் இலக்கியங்களான, தொல்காப்பியம், திருக்குறளில் தமிழ் இசை கருவிகள் குறித்த பதிவுகள் உள்ளன. கலை வடிவங்களை ஆவணப்படுத்தவே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார்.இளைஞர்களுக்கு, தமிழ் இசையை கொண்டு செல்ல வேண்டும். ஒற்றுமை, எழுச்சி, பிரிவு இல்லாத தன்மை குறித்து, பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் பாடப்பட வேண்டும். இசையின் சிறப்பே, வாசிப்பவர் கரைந்து போகவேண்டும். பாடுபவர் மெய்மறந்து போக வேண்டும். வசையால் நிரம்பிய இந்த உலகை, இசையால் நிரப்ப வேண்டும்; இருளால் நிரம்பும் இந்த உலகை அருளால் நிரப்ப வேண்டும். இவ்வாறு, இறையன்பு பேசினார்.
