UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:04 PM
ஆமதாபாத்:
குஜராத்தில், 6 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பகவத் கீதைக்கான துணை பாடப் புத்தகத்தை அம்மாநில அரசு வெளியிட்டுஉள்ளது.நடைமுறைகுஜராத்தில், முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2022 மார்ச்சில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், 6 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பகவத் கீதைக்கான துணை பாடப் புத்தகத்தை நேற்று குஜராத் அரசு வெளியிட்டது. இது, அடுத்த கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, நடைமுறைக்கு வரவுள்ளது.இது குறித்து, குஜராத் கல்வித் துறை இணை அமைச்சர் பிரபுல் பன்செரியா கூறியதாவது:
பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி, தேசிய கல்வி கொள்கை - 2020ன் கீழ், பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புனித நுாலில் உள்ள ஆன்மிகக் கோட்பாடுகள் மற்றும் பண்புகள், மாணவர்களிடையே நன்னெறியை வளர்க்கும்; அவர்களது மதிப்புகளை வலுப்படுத்தும். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பகவத் கீதையின் முதல் பகுதி பாடப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.இரு பாகங்கள்
இந்த புத்தகம், மாநிலம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பகவத் கீதையின் மற்ற இரு பாகங்களின் பாடப் புத்தகங்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
