UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:13 PM
பெங்களூரு:
கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும், தேர்ச்சி சதவீதம் அதிகமாகாததால், பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மாநில அரசு வசம் ஒப்படைக்கப்படுகிறது.பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாட்டில், 142 நர்சரி பள்ளிகள், தொடக்க பள்ளிகள், உயர் நிலை பள்ளிகள், 17 பி.யு., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் இல்லை.கொரோனா காலத்துக்கு பின், மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. அப்படியிருந்தும் பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாணவர் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகிறது. தேர்ச்சி சதவீதத்தில் மாநகராட்சி பள்ளிகள் பின் தங்குகின்றன.இதற்கிடையே மாநகராட்சி பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பள்ளிகளை நிர்வகிக்க முடியாமல் திணறுகிறது. மாநில அரசு நிதியுதவி வழங்கியும், சமாளிக்க முடியவில்லை. எனவே தன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளை அரசு வசம் ஒப்படைப்பது குறித்து, நீண்ட காலமாக ஆலோசித்து வந்தது.இவ்விஷயத்தில், துணை முதல்வர் சிவகுமார் ஆர்வம் காண்பித்தார். கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும், மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்காததால், அவர் வருத்தம் அடைந்தார்.இது தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, கல்வித்துறை கமிஷனர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளை அரசு வசம் ஒப்படைப்பது, பெங்களூரில் கூடுதல் கர்நாடக பப்ளிக் பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இறுதியில், பள்ளி கல்வி, எழுத்தறிவு துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
