UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:11 AM
மதுரை:
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில், பாபநாச சுவாமி கோவிலில் கட்டளை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டளைக்கு சொந்தமான நிலம், விக்கிரமசிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அமலி கான்வென்ட் நிர்வாகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.பள்ளி நிர்வாகம், கட்டளை இடையே பிரச்னை ஏற்பட்டது. பள்ளி நிர்வாகி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்பதை தவிர, வேறு எந்த முடிவுக்கும் எங்களால் வர முடியாது. குத்தகைக் காலம் முடிந்த பிறகும், அதில் தொடரும் குத்தகைதாரரை ஆக்கிரமிப்பாளராகவே கருத வேண்டும்.மனுதாரரின் பள்ளியில், குழந்தைகள் படிக்கின்றனர். எனவே, வெளியேற்ற உத்தரவிடக் கூடாது என மனுதாரர் தரப்பு வாதிட்டது. மனுதாரர் செய்த சட்ட விரோத செயலை நிலைநிறுத்த மாணவர்களை பயன்படுத்த முயற்சிக்கப்படுகிறது. எனவே, 2024 மார்ச் 31ல் சொத்தை ஒப்படைக்க அவகாசம் வழங்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.