வர்த்தக நிறுவனம் துவங்கியதாக புகார்; பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது
வர்த்தக நிறுவனம் துவங்கியதாக புகார்; பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:11 AM
ஓமலுார்:
வர்த்தக நிறுவனம் துவங்கியதாக அளித்த புகாரில், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகந்நாதன், 68, கைது செய்யப்பட்டார்.சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, விதிமீறல் உட்பட, 11 குற்றச்சாட்டுகள் எழுந்ததால், உயர் கல்வித்துறை சார்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில், தமிழக பல்கலை ஆசிரியர் சங்க நிர்வாகி இளங்கோ, கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதில், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகந்நாதன், வர்த்தக ரீதியான நிறுவனம் துவங்கியுள்ளார் என, கூறியிருந்தார்.இதுகுறித்து விசாரித்த போலீசார், நேற்று மாலை 4:45 மணிக்கு, பல்கலை வளாகத்தில், சென்னை செல்ல தயாராக இருந்த துணைவேந்தரை கைது செய்தனர். ரகசிய இடத்தில் அவரிடம் விசாரிக்கின்றனர். கடந்த 2021 ஜூலையில், துணைவேந்தராக பதவியேற்ற இவருக்கு, ஜூன் 2024 வரை பதவிக்காலம் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.முதல்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், அரசு ஊழியர், வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை துவங்க அனுமதி இல்லாத நிலையில், துணைவேந்தர், நண்பர்களுடன் இணைந்து பங்குதாரராக சேர்ந்து வர்த்தக நிறுவனம் துவங்கிஉள்ளார். இது உறுதி செய்யப்பட்டதால் துணைவேந்தர் கைது செய்யப்பட்டார் என்றனர்.