வெள்ளத்தில் மூழ்கிய அரிய நுால்கள் ஆவணங்களை மீட்டெடுக்க உதவுங்கள்
வெள்ளத்தில் மூழ்கிய அரிய நுால்கள் ஆவணங்களை மீட்டெடுக்க உதவுங்கள்
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:16 AM
சென்னை:
வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த அரிய நுால்கள், ஆவணங்களை மீட்டெடுக்கும் பணிக்கு பொதுமக்களிடம் இருந்து, சென்னை குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம் நிதி உதவி கோரியுள்ளது.சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லுாரி வளாகத்தில் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1945ல் துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பல்கலையின் எம்.பில்., பிஎச்.டி., மாணவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மையமாகவும் உள்ளது.கடந்த 78 ஆண்டுகளாக சமஸ்கிருதம் மற்றும் இந்தியவியல் ஆய்வில் உலகப் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது. உயர்தர ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, கலை, கட்டடக் கலை, அறிவியல், யோகா, மதம் போன்ற பல்வேறு துறைகளில் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன.இங்குள்ள நுாலகம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கும், அறிவுசார் செயல்பாடுகளுக்கும் உதவி வருகிறது.மிக்ஜாம் புயல்
இங்கு, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், புகழ்பெற்ற சமஸ்கிருத தத்துவ பேராசிரியர் ஹிரியண்ணா, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற சமஸ்கிருத அறிஞர், இசையமைப்பாளர் வெங்கட்ராமன் ராகவன் போன்ற அறிஞர்களின் வேறு எங்கும் கிடைக்காத, விலை மதிப்பற்ற தனிப்பட்ட சேகரிப்புகள் உள்ளன.மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையால் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம் உள்ள சமஸ்கிருத கல்லுாரி வளாகத்தில் வெள்ளம் புகுந்தது. நான்கு நாட்கள் வெள்ளம் வடியாததால் நுாலகத்தின் தரை தளத்தில் இருந்த, 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட, நுாற்றுக்கணக்கான அரிய நுால்கள், பத்திரிகைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.இது தொடர்பாக குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலர் சீதா சுந்தர்ராம், நுாலகர் லலிதா ஆகியோர் கூறியதாவது:
வரி விலக்கு
ஆங்கில நுாலான பி.வி.கானேவின் தர்ம சாஸ்திரம், பழமையான ஆங்கில என்சைக்ளோபீடியா, டில்லி லலித் கலா அகாடமியின் வெளியீடுகள், காவியமாலா தொகுதிகள் என பல அரிய நுால்கள் வெள்ளத்தில் நனைந்து சேதமடைந்துள்ளன.சென்னை கன்னிமாரா நுாலகம், தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகங்களின் நிபுணர்களின் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மிகவும் சவாலான இந்தப் பணிக்கு மிகுந்த பொறுமையும், நிபுணத்துவமும், நிதியும் தேவை. குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய, மாநில அரசுகளிடம் இருந்த எவ்வித மானியமும் பெறவில்லை; சில நல்ல உள்ளங்கள், கார்ப்பரேட் உதவியுடன் தான் இப்பணி நடந்து வருகிறது.சேதமடைந்த நுால்கள், இதழ்களை மீட்டெடுத்தல், புத்தகம் வைக்கும் அலமாரிகள் உள்ளிட்ட மரச் சாமான்கள் வாங்குதல், மின்சார ஒயரிங், கம்ப்யூட்டர்கள், டிஜிட்டல் கேமராக்கள் வாங்குதல் என ஒட்டு மொத்த பணிக்கும், 1 கோடி ரூபாய் தேவை. இதற்கு பொதுமக்களிடம் இருந்து நிதி உதவி கோருகிறோம். பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.நன்கொடை அளிக்க...
நன்கொடை அளிக்க விரும்புவோர், The Kuppuswami Sastri Research Insititute என்ற பெயரில் டி.டி., அல்லது காசோலை அனுப்பலாம். இதே பெயரில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி, மயிலாப்பூர் கிளைக்கு 395702010007408 என்ற வங்கி கணக்கிற்கு அனுப்பலாம். மேலும் தொடர்புக்கு: குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம், 84, திரு.வி.க., சாலை, மயிலாப்பூர், சென்னை - 600004, போன்: 044 - 24985320, 29505320.