பேராசிரியர்களிடம் ரூ.11 கோடி மோசடி பல்கலை முன்னாள் ஊழியர் கைது
பேராசிரியர்களிடம் ரூ.11 கோடி மோசடி பல்கலை முன்னாள் ஊழியர் கைது
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:24 AM
புதுடில்லி:
புதுடில்லியில், பேராசிரியர்களிடம் 11 கோடி ரூபாய் மோசடி செய்த ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.புதுடில்லியில் ஜே.என்.யு., எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலை இயங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த பல்கலையின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில், ஹரியானாவின் குருகிராமை சேர்ந்த கெய்க்வாட் என்பவர் 2015ல் பணியாற்றி வந்தார். அப்போது, பல்கலை ஊழியர்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதாகக் கூறி நோபல் சமூக அறிவியல் நல அமைப்பை துவங்கிய அவர், பேராசிரியர்கள் உட்பட பல்வேறு நபர்களிடம் அதற்காக பணம் வசூலித்தார்.புதுடில்லி வளர்ச்சி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனைகள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்ததை அடுத்து, அந்த அமைப்பில் உறுப்பினராக சேர்ந்த பலர் கெய்க்வாடிடம் பணம் செலுத்தினர்.இது தொடர்பாக, நஜப்கர் பகுதியில் உள்ள நிலம் ஒன்றை உறுப்பினர்களிடம் காண்பித்த அவர், அதை வாங்கியது தொடர்பான ஆவணங்களை காட்ட மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சந்தேகமடைந்த பேராசிரியர்கள் அது குறித்து கேட்டபோது, கெய்க்வாட் உரிய பதிலளிக்கவில்லை.இதையடுத்து, 2019ல் ஏற்கனவே கூறிய அமைப்பை கலைத்துவிட்டு மற்றொரு அமைப்பில் சேருவதற்கான ஏற்பாட்டை அவர் செய்தார். இதை விரும்பாதவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கெய்க்வாடுக்கு நெருக்கடி கொடுத்தனர்.இதற்கிடையே, பல்கலையில் இருந்து ஓய்வு பெற்ற கெய்க்வாட், பணத்தை தராமல் இழுத்தடித்ததை அடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.இதையடுத்து, கடந்த 14ம் தேதி கெய்க்வாடை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஜே.என்.யு., பல்கலை பேராசிரியர்களிடம் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.