செம்மொழி பூங்காவில் ரூ.25.56 கோடியில் நில அளவீடு பணி துவங்கியாச்சு!
செம்மொழி பூங்காவில் ரூ.25.56 கோடியில் நில அளவீடு பணி துவங்கியாச்சு!
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:31 AM
கோவை:
கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில், செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 18ம் தேதி துவக்கி வைத்தார். இப்பூங்கா, 165 ஏக்கரில் அமைய இருக்கிறது.முதல் கட்டமாக, 45 ஏக்கரிலும், அடுத்த கட்டமாக, மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றியதும், மீதமுள்ள, 120 ஏக்கருக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், மூங்கில் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம், நறுமண வனம் என, 23 விதமான தோட்டங்கள் அமைக்கப்படும்.சிறப்பு அம்சமாக, மூடு பனி வீடு, பசுமை வீடுகள் உருவாக்கப்படும். பார்வையாளர்களின் தேவைக்காக இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம் மற்றும் நவீன வசதிகளுடன், 1,000 இருக்கைகளுடன், மாநாட்டு மையம் கட்டப்படுகிறது.தற்போதைய திட்டத்தின் மொத்த மதிப்பீடு, ரூ.172.21 கோடி. ஒப்பந்த நிறுவனத்தினருக்கு மாநகராட்சியில் இருந்து, ஒர்க் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அடிக்கல் நாட்டி துவக்கி வைத்ததை தொடர்ந்து, பூங்கா அமையும் இடங்களை சுத்தம் செய்து, பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டுவதற்கு, நில அளவீடு செய்யும் பணி நேற்று துவக்கப்பட்டது.இதன் அருகாமையில், மல்டிலெவல் கார் பார்க்கிங், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் செம்மொழி பூங்கா நுழைவாயில் அமைய இருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், செம்மொழி பூங்கா, தாவரவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அடங்கிய குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலை வாழ் அரியவகை தாவரங்கள் பாதுகாக்கப்பட்டு, இப்பூங்காவில் இடம்பெறும். இது ஒரு இயற்கை பசுமை சுற்றுலாதலமாக விளங்கும். ஒன்றரை ஆண்டுக்குள் இப்பணி முடியும் என்றனர்.