மூலிகை காய்கறி தோட்டம் அமைக்க விழிப்புணர்வு பிரசாரம்
மூலிகை காய்கறி தோட்டம் அமைக்க விழிப்புணர்வு பிரசாரம்
UPDATED : ஜன 01, 2024 12:00 AM
ADDED : ஜன 01, 2024 10:43 AM
சின்னமனுார்:
வீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம், மூலிகை தோட்டம் அமைக்க பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட அளவில் பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக சின்னமனுார் கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திகழ்கின்றனர்.இப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குறுங்காடு ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். இதில் வேம்பு, புங்கன், மருதம், மா, கொய்யா, எலுமிச்சை, நார்த்தை, பூவரசு, தென்னை, பாதாம், நெல்லி, வில்வம் உள்பட ஏராளமான மரக்கன்றுகளை வளர்த்து, அவை தற்போது பயனளிக்கும் மரங்களாக உள்ளன. இதை தவிர்த்து தற்போது காய்கறி, மூலிகைத் தோட்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.தங்களது பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாணவர்கள் மாற்றி வருகின்றனர். தற்போது நகரின் ஒவ்வொரு பகுதியாக பிரித்து, வீடுதோறும் காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம் அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர், பசுமைப்படை ஆசிரியரை நியமித்துள்ளார். அவர் மாணவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்து விடுமுறை நாட்களில் இந்த பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.