UPDATED : ஜன 02, 2024 12:00 AM
ADDED : ஜன 02, 2024 09:54 AM
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு புவிசார் அரசியல், அது சார்ந்து நடக்கும் போர்கள், பருவநிலை மாற்றங்கள், உணவு வினியோகச்சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு போன்றவற்றால் உலக நாடுகள் சற்று ஆடிப்போனது.கொரோனா பெருந்தொற்று, அதன்பிறகு ஏற்பட்ட உக்ரைன் - ரஷ்யா போர் போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்காவிலும் பெரிய அளவில் பொருளாதார பின்னடைவு வரும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், அதுபோல் பெரிய அளவிலான பின்னடைவு ஏற்படவில்லை.மேலும், 2023, ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் நன்றாக வளர்ச்சி பாதையில் சென்றன. 2023, நவம்பரில் இந்திய பங்குச்சந்தை அதிக பட்ச உட்சமாக நான்கு லட்சம் கோடி டாலர் வர்த்தகம் தொட்டன. இதுவே, 2007 ல் ஒரு லட்சம் கோடி டாலர், 2017 ல் இரண்டு லட்சம் கோடி டாலர், 2021 ல் மூன்று லட்சம் கோடி டாலர் என்று இருந்த நிலையில் 2023 ல் நான்கு லட்சம் கோடி டாலர் வர்த்தகத்தை தொட்டு, கடைசி நான்கு ஆண்டுகள், இந்திய பங்குச்சந்தைகள் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன.பொருளாதார மந்தநிலையால் அமெரிக்காவில் சில வங்கிகள் மூடப்பட்டன. உக்ரைன் - ரஷ்யா போர், காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்களினால் உலக நாடுகளின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்துள்ள சூழ்நிலையில், தெளிவான திட்டமிடல், ஸ்திரமான வளர்ச்சி என இந்தியாவின் பொருளாதாரம் வேறு பாதையில் பயணிக்க தொடங்கியது.இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் முழுவதும் ரிசர்வ் வங்கியால் வாபஸ் பெறப்பட்டன. மிக குறைந்த செலவில், சந்திராயன் -3 திட்டம் வெற்றிபெற்று, நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் இறங்கி சாதனை படைத்து விண்வெளி வியாபாரத்திலும் வெற்றிக்கொடி நாட்டினோம். அதைத்தொடர்ந்து இந்திய, அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டன.ஆரோக்கியமான பொருளாதாரம்
இந்தியாவின் ஏற்றுமதி துறை மட்டும் 2023 ஆம் ஆண்டில் சுணக்கத்தை சந்தித்தது. உலக அளவில், தேவை குறைவு; வட்டி அதிகம் போன்ற காரணங்களால், இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் பணவீக்கம் 4.75 சதவீதம் என்ற அளவிலேயே கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா பெருந்தொற்றுக்குப்பிறகு, அமெரிக்காவில் 40 ஆண்டுகள் இல்லாத பணவீக்கம் ஏற்பட்டது. இந்தியாவிலும் பணவீக்கம் பெரும் சவாலை ஏற்படுத்தியது. ஆனால் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து வட்டி வீதங்கள் குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் வலுவான தொழிலாளர் பங்களிப்பும், ஸ்திரமான கார்ப்பரேட் வருவாயும் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் ஸ்திரமாக இருக்கிறது. இவையெல்லாம் இந்தியாவின் பொருளாதார பாதையின் ஆரோக்கியத்தை காண்பிக்கின்றன.இஸ்ரேல், காஸா போரினால், சரக்கு கப்பல் போக்குவரத்து சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. அச்சம் காரணமாக சரக்கு கப்பல்கள் நீண்ட தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை இருப்பதால், கடல்வழி சரக்கு போக்குவரத்து செலவினங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நடந்து வரும் இரண்டு போர்களினால், உலக நாடுகள் பாதுகாப்புத்துறையை நவீனப்படுத்தி வருகின்றன. அதற்கான முதலீடு அதிகரித்துள்ளன. ஆயுத கொள்முதல் அமோகமாக உள்ளன.ஆசிய நாடுகளில் சீனா பொருளாதாரத்தில் வலுவாக இருந்தாலும், அமெரிக்கா இந்தியாவை மட்டுமே ஆதரிக்கிறது. 2010 இல் அமெரிக்கா, எப்படி சீனாவை கைதூக்கி விட்டதோ அதே அளவு ஆதரவு தற்போது இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது.இந்த சூழ்நிலையில் 2024 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. இது இந்தியாவிற்கு தேர்தல் ஆண்டு. வரும் ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த சூழலில் 2024 ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.2023 ம் ஆண்டில், இந்தியாவில், உற்பத்தி துறை ஓஹோ என்றிருந்தாலும், குறிப்பிட்ட சில தொழில்துறைகள் சரிவை சந்தித்தன. ஜவுளி, பின்னலாடை, சர்வீஸ், சாப்ட்வேர் துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில் வழக்கத்தைவிட 40 சதவீதம் அளவிலேயே உற்பத்தி இருந்தது. கோவிட் பெருந்தொற்று ஊரடங்கிற்குப்பிறகு, இயங்க தொடங்கிய எம்.எஸ்.எம்.இ., தொழில்துறைகளுக்கு போதுமான பணப்புழக்கம் இல்லை. தொழிலை விரிவுபடுத்த முடியாமல், பல குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்துபோயிள்ளன.ஏற்றம் பெறும் ஏற்றுமதி
2023இல் தடுமாற்றத்தை சந்தித்த ஜவுளி, பின்னலாடை, சர்வீஸ் ஏற்றுமதி துறைகளுக்கு 2024 ஆம் ஆண்டும் கொஞ்சம் சவாலானதுதான். ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை மாறி, அந்த நாடுகளுக்கான நமது ஏற்றுமதி வழக்கமான அளவில் இருந்தால்தான், மேற்குறிப்பட துறைகள் ஏற்றம் பெறும்.ஐரோப்பிய நாடுகளை போன்று ஜப்பானிலும் மந்தநிலை நிலவுகிறது. அமெரிக்கா 2023 ஆம் ஆண்டில் மந்த நிலையில் இருந்து கொஞ்சம் தப்பியது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதார நிலவரங்கள் பொதுவாக இந்திய சந்தைகளையும் பாதிக்கும். காரணம், அங்கு, பெடரல் வட்டி வீதங்கள் மாறும்போது, அது நமது பங்குச்சந்தையையும் பாதிக்கிறது.அமெரிக்காவில் வட்டி வீதங்கள் குறையும்போது அங்கிருக்கும் முதலீடுகளை இந்திய பங்குச்சந்தைகளுக்கு மடை மாற்றுகிறார்கள். அங்கே நிலவரம் சரியாகும்போது, இங்கு முதலீடு செய்ததை அமெரிக்க சந்தைகளுக்கு மடை மாற்றுகிறார்கள். ஆனால் தற்போது பெருமளவு பாதிப்பதில்லை. காரணம், பங்குச்சந்தையில் நம் நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் முதலீடு செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எப்படியோ ஆனால், இந்தியாவிற்கு 2024 - 25 ஆம் ஆண்டு 7 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்று உலக பொருளாதார அமைப்புகள், நிபுணர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது. அதுவே நமது புத்தாண்டிற்கான பொருளாதார பலம்.நமது நாட்டில், பல வங்கிகள் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. வங்கி பங்குகள் நல்ல நிலையில் உள்ளன. வாடிக்கையாளர்கள் நன்றாக இருந்தால்தானே, வங்கிகள் நன்றாக இருக்கும்.வங்கிகளின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சிக்கு சாட்சி. தவிரவும், கார்ப்பரேட் முதலீடும், வளர்ச்சியும் நமது நாட்டில் நன்றாக இருக்கிறது.நாம் முன்பே சொன்னதுபோல், ஏற்றுமதியில், ஜவுளி போன்று சில துறைகள் சுணக்கம் கண்டுள்ளன. ஏற்றுமதியும் சுணக்கம் கண்டு, மாதம் 30 பில்லியன் டாலர் எட்டுவதற்கே சிரமப்படுகின்றன. சாப்ட்வேர் ஏற்றுமதியிலும் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. ஐ.டி. நிறுவன பங்குகளும் சுணக்கம் கண்டுள்ளன.இதுதவிர, மத்திய அரசின் செலவினங்களை (கேப்பிட்டல் எக்ஸ்பென்டிச்சர்) பொருத்தவரை, ஜி.டி.பி.யில், 5.9 சதவீதம் அளவிற்கு நன்றாகவே இருக்கிறது.ஆனால், வீட்டு சேமிப்பு விகிதம் 5.1 என்ற அளவில் இருக்கிறது. அரசின் கடன் நிலவரங்களை பொறுத்தவரை, 6 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. இது நாட்டின் பொருளாதார முன்னேற்றம், ஸ்திரத்தன்மை தொடர்வதற்கு அரசு நன்றாக செலவு செய்வதையே காட்டுகிறது.காலத்தின் கட்டாயம்
அடுத்ததாக, உலக அளவில் நடக்கும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு நமது நாடும் தயாராக வேண்டும். சமீபத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கும் &'ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (ஏ.ஐ.) டெக்னாலஜிக்கு&' பல துறைகளும் மாற்றம் கண்டு வருகின்றன. அது காலத்தின் கட்டாயம். மறுபடி, மறுபடி செய்யக்கூடிய ஒரே மாதிரியான பணிகளை ஏ.ஐ., செய்து முடித்து விடுகிறது. அங்கே மனித வளத்தின் அவசியம் இல்லாமல் போகிறது. இதனால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று பயம் இருந்தால்கூட, பணிகள் குறைவு. மதிப்புகூட்டல் அதிகம். உற்பத்தி ஜோராக நடக்க வாய்ப்புள்ளது. டெக்னாலஜியில் அப்டேட் ஆன நிறுவனங்களுக்கு இதனால் வருவாய் உயரும். புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் உலக நாடுகள் பார்வையில் சிறப்பான தொடக்கமாக பார்க்கப்படுகின்றன. நாமும் அவற்றை சுவீகரிக்க வேண்டும்.பொருளாதார சீர்திருத்தம்
கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்த சட்டங்களை தைரியமாக அரசு அறிமுகப்படுத்தியன் பலனை ஏற்கனவே பார்க்கிறோம். இருப்பினும் வரும் காலங்களில் கால மாற்றங்கள், புதிய தொழில் சூழலுக்கு ஏற்ப, தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் போன்றவற்றில் இன்னும் முன்னேற்றம் இல்லாததால், உற்பத்தி துறையில், அந்நிய முதலீடு ஈர்ப்பில் சில சுணக்கம் நிலவுகிறது.வரும் 2024 ம் ஆண்டு மத்தியில் உலக அளவிலும், இந்திய அளவிலும் பொருளாதார வளர்ச்சியில் சிறிது சுணக்கம் இருக்க வாய்ப்புள்ளது. அதன்பின் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி கணிசமாக உயரும் என்பதுதான் பெரும்பான்மையானோரின் கணிப்பு.மத்தியில் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், 2030 ஆம் ஆண்டில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா தலைநிமிரும் என்பது நிச்சயம். அந்த மகிழ்வுடனும், நம்பிக்கையுடனும், உற்சாகத்துடன் புதிய ஆண்டை வரவேற்போம்.ரிசர்வ் வங்கி நிம்மதி அறிவிப்பு
நடப்பு நிதியாண்டில் நம்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டிருந்தது. இருந்தபோதும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகவும், 2வது காலாண்டில் 7.6 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி இருந்தது. அதன்பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக ரிசர்வ் வங்கி 2023 டிசம்பரில் உயர்த்தியது.மேலும், 2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.7 சதவீதத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடங்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது நிம்மதியளிக்கிறது என ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் கூறியுள்ளார்.