UPDATED : ஜன 03, 2024 12:00 AM
ADDED : ஜன 03, 2024 10:40 AM
சென்னை:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசியின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில், சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.இன்று, 47வது புத்தகக் கண்காட்சி, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் துவங்குகிறது. இதை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, கலைஞர் பொற்கிழி மற்றும் பபாசி விருதுகளை வழங்குகிறார்.உரைநடைக்காக சிவசுப்பிரமணியன், கவிதைக்காக உமா மகேசுவரி, நாவலுக்காக தமிழ்மகன், சிறுகதைக்காக அழகிய பெரியவன், நாடகத்துக்காக வேலு சரவணன், மொழிபெயர்ப்புக்காக மயிலை பாலு ஆகியோருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட உள்ளன.அதேபோல், சிறந்த பதிப்பாளருக்கான விருதுக்கு அனுஷ், சிறந்த நுாலகருக்காக ஆசைத்தம்பி, சிறந்த புத்தக விற்பனையாளருக்காக கிரி டிரேடிங் கம்பெனி, சிறந்த குழந்தை எழுத்தாளருக்காக சி.எஸ்தேவநாதன் ஆகியோருக்கு பபாசி விருதுகள் வழங்கப்படுகின்றன.சிறந்த தமிழறிஞருக்காக குழ.கதிரேசன், சிறந்த பெண் எழுத்தாளருக்காக இன்பா அலோசியஸ், சிறந்த சிறுவர் அறிவியல் நுாலுக்காக வேலைய்யன், கவிதை இலக்கியத்துக்காக, இலக்கிய நடராஜன், சிறந்த தன்னம்பிக்கை நுாலுக்காக கமலநாதன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலை நாட்களில் பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கண்காட்சி நடக்கிறது. தினமும் மாலையில் சிந்தனை அரங்கம் என்ற நிகழ்ச்சியில், அறிஞர்கள், எழுத்தாளர்கள் பேசுவர்.அரசு துறை பதிப்பகங்கள், உலகப்புகழ்பெற்ற ஆங்கில பதிப்பகங்கள், சிங்கப்பூர் பதிப்பகங்கள் உள்ளிட்டவையும் அரங்கு அமைத்துள்ளன. அனைத்து நுால்களும் 10 சதவீதம் தள்ளுபடியில் விற்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி, பூம்புகார் நிறுவனம் கைவினைப்பொருள் கண்காட்சி அரங்கும் இடம் பெற்றுள்ளது.